மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 7 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 16



பாகம் :16
இந்த காலகட்டத்தில் ஸலாவுத்தீன் தனக்கெதிரான மூன்று விரோதிகளை சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருந்தார். அவர்கள் ஃப்ராங்க்ஸின் சிலுவைப் போராளிகள், நூருத்தீனின் இளவரசர்கள் மற்றும் இஸ்மாயிலீஸ் பிரிவினர்கள். இவர்கள் மூவரும் கூட்டாக இணைந்து இராக், சிரியா மற்றும் எகிப்தில் இஸ்லாமின் ஒற்றுமையைக் குலைக்க திட்டம் தீட்டினர். ஸலாவுத்தீன் இறைவன் அவருக்களித்த விவேகம், அதிகாரம், திட்டமிடும் தகுதி போன்றவற்றை பயன்படுத்தி அவர்களை வென்றெடுத்தார்.
ஸலாவுத்தீனின் தலைமையின் கீழ் இணைந்த நாடுகள்
நூருத்தீனின் இறப்பிற்குப் பிறகு ஸலாவுத்தீன் மாபெரும் இஸ்லாமிய ஆட்சியை உலகில் தன் கொடிக்கு கீழ் கொண்டு வரும் அனைத்து வாய்ப்பு களையும் பெற்றார். தனது இராணுவ, போர் மற்றும் அரசியல் அநுபவத்தால் அவர் ஒவ்வொரு நாடாக இணைக்க முயற்சித்தார். அவர் காலத்தில் ஏமன் நாட்டில் பல கட்சிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஏமன் பல துண்டுகளாக சிதறியது. ஹமதானிக்கள் சனா நகரிலும், நஜாஹிகள் ஸுபைதிலும் ஒருவருக்கொருவர் பதவிக்கு அடித்துக் கொண்டனர். மேலும், இஸ்லாம் கூறும் இறுதிக் கால “அல் மெஹதி” தாம் தான் என்று ஒருவர் கிளம்பி பிரசாரம் செய்தார். இவரால் சமூக ஒற்றுமை சிதைந்து ஏமனில் படுகொலைகளும், அராஜகங்களும் நிறைந்தது. முஸ்லீம்கள் அநியாயமாக கொல்லப் படுவதை எண்ணி வேதனை அடைந்த ஸ்லாவுத்தீன் தன் சகோதரர் துரன்ஷாஹ் என்பவரை அனுப்பி ஏமனின் சச்சரவுகளை நீக்க உத்தரவிட்டார். அந்த காரியத்தில் துரன்ஷாஹ் வெற்றி பெற்று ஏமனை எகிப்து மற்றும் சிரியாவுடன் இணைக்கச் செய்தார்.
துரன்ஷாஹ் தனது இராணுவத்துடன் நைல் நதியின் வழியாக குஸ் நகர் வரை சென்று, பின் தரை மார்க்கமாக செங்கடல் அடைந்து கப்பல் மூலம் ஜித்தா நகர் சென்று அங்கிருந்து ஏமன் அடைந்தார். அவர் ஸுபைத் பகுதியையும் மற்ற கோட்டைகளையும் கைப்பற்றினார். சில சரித்திர ஆசிரியர்கள் அவர் ஏறக்குறைய 80 நகரங்களையும், கோட்டைகளையும் வெற்றி கொண்டார் என கூறுகிறார்கள். ஏமன் மக்கள் சீர்குலைந்து போன நிர்வாகத்தின் கீழ் இருந்தபடியால் துரன்ஷாவின் வருகையை பெரிதும் விரும்பி னார்கள். சில அரண்மனை, கோட்டைக் காவலர்கள் இரத்தம் சிந்துவதை தவிர்த்து தாங்களாகவே முன் வந்து சாவிகளை ஒப்படைத்தனர். ஏமன் மக்கள் நாட்டில் நிலையான தன்மையை நாடினர். துரன்ஷா வெற்றிக்குப் பிறகு தோழர்களுடன் கூட்டம் நடத்தி சரியான தலைமைச் செயலகம் ஏற்படுத்த எண்ணி தாஸ் நகரை அதற்காக தேர்ந்தெடுத்தார்.
ஸலாவுத்தீன் துரன்ஷாவையே ஏமனுக்கு ஆட்சியாளராக்கினார்.    துரன்ஷாவிற்க்குப் பிறகு இன்னொரு சகோதரர் டக்டகின் இப்னு அய்யூப் 593 A.H. ல் அவர் மரணிக்கும் வரை ஏமனின் ஆட்சியாளராக இருந்தார். அய்யூபிட்கள் ஆட்சி ஏமனில் ஏறக்குறைய 80 ஆண்டுகள் (569 A.H. லிருந்து 652 A.H. வரை ) இருந்தன. சகோதரர் ஏமனை வெற்றி கொண்ட அதே ஆண்டு ஸலாவுத்தீன் பர்காஹ், திரிபோலி மற்றும் கிழக்கு துனிஸியா விலிருந்து கபிஸ் வரை வென்றார்.

கருத்துகள் இல்லை: