மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 23 ஆகஸ்ட், 2014

பஹாமனி ஆட்சி 2



1436 லிருந்து 1458 வரை இரண்டாம் அஹ்மது ஷாவின் ஆட்சி நடைபெற்றது. இவர் ஒரு சிறந்த மன்னராக விளங்கியதோடல்லாமல் மகானாக புகழ் பெற்றார். வெளியிலிருந்து வந்தவர்களுக்கே தனது மந்திரிசபையில் இடமளித்தார். சங்க்மேஷ்வர் ராஜாவின் மகளை மணந்து அவருக்கு “ஸெபா செஹ்ரா” என்னும் பட்டம் சூட்டினார். இரண்டாம் அஹ்மது ஷாவின் பெயரில் வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தின் காலம் கண்டுபிடிக்க பட்டபின் முதலாம் அஹ்மது ஷா உயிருடன் இருக்கும் போதே இரண்டாம் அஹ்மது ஷா ஆட்சியில் இருந்ததாக அறியப் படுகிறது. இரண்டாம் அஹ்மது ஷா தனது காலில் பலமாக ஏற்பட்ட காயத்தின் காரணமாக இறந்தார். 1458 லிருந்து 1461 வரை அலாதீன் ஹுமாயுன் ஸாலிம் ஷா ஆட்சியிலிருந்தார். இவர் முந்தைய ஆட்சியாளரின் மூத்த மகனாவார். எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகவும், கடுமையானவராகவும் இருந்தார். தனது நெருங்கிய உறவினர் சிக்கந்தர் கானுக்கு அதிகாரம் வழங்க, அவர் புரட்சியில் ஈடுபட்டார். அவரை அலாதீன் ஹுமாயுன் ஸாலிம் ஷா நசுக்கிக் கொண்டார். 1461 ல் ஹுமாயுன் இறந்தார். இவருக்குப் பிறகு, இவர் மகன் மூன்றாம் அஹ்மது என்னும் நிஜாம் ஷா 1461 லிருந்து 1453 வரை பதவியில் இருந்தார். இவர் தனது எட்டாவது வயதில் ஆட்சிக்கு வந்தார். ஷா முஹிப்புல் லா மற்றும் சையதுஸ் ஸதாத் சையத் ஹனிஃப் ஆகியோரின் மேற்பார்வையில் ஆட்சி புரிந்தார். தோவகிர் ராணி மக்துமா இ ஜஹான் நர்கிஸ் பேகம் இவரின் ஆட்சிக்கு மையமாக இருந்து ஆண்டதாக சொல்லப்படுகிறது. மூன்றாம் அஹ்மதுவின் ஆட்சியில் அனைத்து அரசு கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். மூன்றாம் அஹ்மது திருமணநாள் அன்று மரணமடைந்தார். இவருக்குப் பிறகு, இளைய சகோதரர் ஷம்சுத்தின் மூன்றாவது முஹம்மது ஷா ஆட்சிக்கு வந்தார். 1463 லிருந்து 1482 வரை ஆண்டார். மூன்றாவது முஹம்மது ஷா 14 வயதில் திருமணம் செய்து கொண்டார். தோவகிர் ராணியும் அதிகாரவர்கத்திலிருந்து விலகிக் கொண்டார். மலிக் உத் துஜ்ஜார் மஹ்முத் கவான் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட்டார். இவர் பஹாமனி ஆட்சியை சரித்திரத்தில் இடம் பெற பல நன்மைகள் செய்தார். இவர் காலத்தில் பரேண்டா கோட்டை, பிதாரின் புகழ்பெற்ற கல்லூரி மற்றும் பிதாரின் மதரஸா ஆகியவை குறிபிடத்தக்கவை. கோவா மற்றும் ஒரிஸ்ஸாவின் கபிலேஸ்வர் வெற்றி கொள்ளப்பட்டது. தோவகிர் ராணி 1470 ல் இறந்தார். பஹாமனிகளின் எல்லை வங்காள விரிகுடா வரை கிழக்கிலும், அரபிக்கடல் வரை மேற்கிலும் பரவியது. மஹ்முத் கவான் தான் முதல்முதலாக எல்லைகளையும், நிலங்களையும் அளந்து அதற்கேற்றார்போல் நகரங்களிலும், கிராமங்களிலும் வரி வசூலிக்கச் செய்தார். பஹாமனிகளின் தெற்கு எல்லையாக காஞ்சிபுரம் வரை பரவியது. ஒரிஸ்ஸாவின் புருஷோத்தமுக்கும், தனக்கும் டெக்கானை பிரிப்பது தொடர்பாக போலி பத்திரம் உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, மஹ்முத் கவான் 73 வது வயதில் மன்னரால் மரணதண்டனை கொடுக்கப்பட்டார். பின்னாளில் மஹ்முத் கவான் நேர்மையானவர் என்பதை அறிந்து, அவர் மகனுக்கு மூன்றாவது முஹம்மது ஷா பதவிகள் வழங்கினார்.
                                             மூன்றாவது முஹம்மது ஷாவிற்குப் பிறகு, மகன் நான்காவது முஹம்மது ஷா 1482 லிருந்து 1518 வரை ஆட்சியிலிருந்தார். இவர் 12 வயதில் ஆட்சிக்கு வந்தார். புதிய நடைமுறையாக ராணி அதிபராக இருந்தார். இவர் எந்தநேரமும் மது, மாது மற்றும் ஆடல் பாடல்கள் கேளிக்கைகளிலேயே மூழ்கியிருந்தார். இவரின் ஆட்சியின் போது தான் அஹமது நகர் உருவாகியது. இவருக்குப் பிறகு, மகன் 1518 லிருந்து 1520 வரை ஆண்டார். சுல்தானேட் ஐந்து பகுதிகளாக அஹமதுநகர், பிரார், பிதார், பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா என பிரிந்தது. அனைத்தும் சேர்ந்து டெக்கான் சுல்தானேட் என்று அழைக்கப்பட்டது. இவருக்குப் பிறகு, மகன் அலாத்தின் ஷா 1520 லிருந்து 1523 வரை ஆட்சியிலிருந்தார். இவர் மிகவும் நல்லவராக இருந்தார். பதவிக்கு ஆசைப்பட்ட அமீர் பரீத் என்பவர் மன்னர் மீது பழி சுமத்தி கொன்றார். இவருக்குப் பின் மஹ்முத் ஷாவின் மகன் வலி அல்லாஹ் ஷா 1523 லிருந்து 1526 வரை ஆட்சி செய்தார். அமீர் பரீதே இவரை பதவியில் அமர்த்தினார். இவரை அரண்மனையின் பெண்களுடன் உணவு மற்றும் உடைகள் கொடுத்து கைதியாகவே வைத்திருந்தார். அமீர் பரீத் அஹமது ஷாவின் 23 வயதான விதவை மனைவி பீபி சித்தி என்பவரை மணந்து கொண்டார். நாளடைவில் ராணியுடனும் கள்ளத்தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். இதை மன்னர் எதிர்க்க விஷம் வைத்து கொல்லப்பட்டார். 1526 முதல் 1527 வரை கலிமுல்லாஹ் ஷா ஆட்சி செய்தார். கலிமுல்லாவின் மகன் மஹ்மூத் ஷா தான் கடைசி பஹாமனிகளின் மன்னர். இவரை அமீர் பரீத் தன் கைப்பாவையாக வைத்திருந்தார். அந்த நேரத்தில் தான் புதிய புயலாக ஜஹீருத்தீன் முஹம்மது பாபர் இந்தியாவுக்குள் நுழைந்தார். அனைத்து டெக்கான் ஆட்சியாளர்களும் புதிய மொகலாய மன்னருக்கு அடிபணிந்தனர். கலீமுல்லாஹ் ஷா பாபருக்கு கடிதம் எழுதி தன்னை அமீர் பரீதிடமிருந்து விடுவிக்க வேண்டினார். இந்த தகவல் வெளியாகி விட கலிமுல்லாஹ் உயிருக்கு பயந்து 1527 ல் பிஜப்பூர் சென்றார். அங்கு சரியான வரவேற்பில்லாததால் அஹ்மத்நகர் சென்றார். அங்கு சுல்தானேட் ஆட்களால் பிடித்துக் கொல்லப்பட்டார். அவரின் உடல் பிதாருக்கு கொண்டு வரப்பட்டது. இவருக்குப் பிறகு, இவர் மகன் இல்ஹமுல்லாஹ் மக்காவுக்கு சென்றார். அவர் திரும்பவே இல்லை. இப்படியாக 200 ஆண்டுகளாக ஆண்ட பஹாமனி ஆட்சி முடிவுக்கு வந்தது. இவர்களின் ஆட்சியில் தர்கா வழிபாடு மேலோங்கி இருந்தது. இறைவன் தந்த அருட்கொடையாம் அரசாட்சியை போட்டி, பொறாமை, மது, மாது, கொலைகள் என்று தவறாக பயன்படுத்தி இழந்தவர்கள்.

பஹாமனி ஆட்சி 1



பஹாமனி ஆட்சி என்பது 1347 லிருந்து 1527 வரை நீண்டிருந்தது. இது பஹாமனி சுல்தானேட் அல்லது பஹாமனி எம்பயர் என்று அழைக்கப்பட்டது. தென்னிந்தியாவில் பரந்து வடக்கில் டெக்கான் கிருஷ்னா நதி பகுதி வரை இருந்தது. சில சரித்திர ஆய்வாளர்கள் பஹாமனி ஆட்சி சௌலதாபாத் ( எல்லோரா குகை பகுதி) வரை முஹம்மது பின் துக்ளக் ஆட்சியில் இருந்ததாகக் கூறுகிறார்கள். 1347 ஆகஸ்டு 3 ல் துருக்கி கவர்னராக இருந்த அலாவுத்தின் ஹசன் பாஹ்மன் ஷா(ஹசன் கங்கு அல்லது அல்லாவுதீன் ஹசன்) என்பவர் டெல்லி சுல்தானாக இருந்த முஹம்மது பின் துக்ளக்கை புரட்சி மூலம் எதிர்த்து பஹாமனி ஆட்சி அமைத்தார். இவர் தஜிக் பெர்ஷியன் வழி வந்தவராக கருதப்படு கிறார். இவரின் புரட்சி வெற்றிபெற்று தற்போதைய கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வரை ஆட்சி பரவியிருந்தது. டெக்கான் பகுதியிலிருந்து தெற்கில் ஹிந்து விஜயநகரம் வரை அதிகாரம் பெற்றிருந்தார்கள். 1347 லிருந்து 1425 வரை முஹம்மதாபாதுக்கு (பிதார்) மாற்றும் வரை இவர்களின் தலை நகரம் அஹ்சனாபாதாக (குல்பர்கா) இருந்தது. 1466 லிருந்து 1481 வரை மஹ்முத் கவான் என்பவரது ஆட்சியில் பஹாமனி சுல்தானேட் மிகவும் உச்சத்தில் இருந்தது. 200 ஆண்டுகால ஆட்சியில் 18 மன்னர்கள் பஹாமனி சுல்தானேட்டில் ஆட்சி புரிந்தனர். 1518 ல் சுல்தானேட் நான்கு சிறு பகுதிகளாக பிதார், கோல் கொண்டா, அஹ்மதாபாத் மற்றும் பிஜப்பூர் என்று பிரிந்தது. ஆரம்பத்தில் பஹாமனி சுல்தானேட் விஜய நகரத்துடன் போர் புரிந்தது.
                                              பஹாமனி சுல்தானேட் வரலாற்றில் ஃபிரோஷ் ஷா என்பவரது ஆட்சி பெயர் பெற்றது. இவர் உலக அறிவைப் பெற்றிருந்தார். பஹாமனி சுல்தானேட்டை மத்திய இந்தியாவின் கலாச்சார மையமாக பெரிதும் விரும்பினார். மூன்று முறை விஜயநகரம் மீது போர் புரிந்தார். தனது எல்லையை வாராங்கல் வரை பரப்பினார். தனது ஆட்சியை சகோதரர் முதலாம் அஹ்மது ஷாவுக்கு வழங்கினார். வேளாண்மை துறை பஹாமனி சுல்தானேட்டில் முக்கியமானதாக இருந்து வருவாயைத் தந்தது. இவர்களில் டெக்கானிஸ் (பழையவர்கள்) மற்றும் அஃபக்விஸ் (புதியவர்கள்) என்று இரு பிரிவினர் இருந்தனர். இவர்களுக்குள் எப்போதும் கருத்து வேறுபாடு இருந்தது. மஹ்முது கவான் ஆட்சியை பரப்பினார். இவர் அஃபக்விசாக கருதப்பட்டதால் பழையவர்களின் நம்பிக்கையைப் பெற சிரமப் பட்டார். 1482 ல் இருபிரிவினரிடையே தோன்றிய கருத்து வேறுபாடால் முஹமது ஷா என்பவரால் 70 வது வயதில் கொல்லப்பட்டார்.
                                           பஹாமனி சுல்தானேட் பெர்ஷியா, துருக்கி மற்றும் அரேபியா விலிருந்து நவீன வேளாண்மை கலையை அறிமுகப்படுத்தினார்கள். வடக்கிலும், தெற்கிலும் கலாச்சாரம் ஓங்கி வளர்ந்தது. பஹாமனி சுல்தானேட் ஆட்சியின் கும்பஸ் மற்றும் சார்மினார் (ஹைதராபாத்) கட்டிடங்கள் சிறப்பு வாய்ந்தது. இந்திய இஸ்லாமிய கலை மற்றும் மொழி சிறப்பாக வளர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் இஸ்லாமிய கலாச்சாரம் வளர்ந்தது. 1321 லிருந்து 1422 வரை வாழ்ந்த சூஃபி குரு ஹஜ்ரத் பந்தே நவாஸ் அவர்களின் ஈடுபாடும் அதிகம். மஹ்முத் கவான் தனது சொந்த செலவில் சமர் கண்டிலும், கோரசானிலும் மதரஸா மற்றும் பல்கலைக்கழகங்களையும் உருவாக்கினார். பின்னாளில் வந்த குடிகார மன்னனால் தலை வெட்டிக் கொல்லப்பட்டார். குல்பர்கா பிரதேசத்திலிருந்து 1347 லிருந்து 1358 வரை அலாவுத்தின் ஹசன் பாஹ்மன் ஷாவும், 1358 லிருந்து 1375 வரை முதலாம் முஹம்மது ஷாவும் ஆண்டனர். குல்பர்கா கோட்டையில் ஜும்மா மஸ்ஜிதும், குல்பர்கா நகரில் ஷா பஸார் மஸ்ஜிதும் கட்டினார். விஜயநகரம், வாராங்கல் மீது போர் தொடுத்தார். கோட்டைகளும், யானைகளும், குதிரைகளையும் கோல்கொண்டா நகருடன் பெறப்பெற்றார். இவர் 1375 ல் அதிகமாக குடித்து மரணமடைந்தார்.
                               இவருக்குப் பிறகு, மகன் அலாவுதின் முஜாஹித் ஷா 1375 லிருந்து 1378 வரை தனது 19 வது வயதில் ஆண்டார். இவர் முபாரக்கான் என்பவரது மகன் மசூத்கானால் கொல்லப் பட்டார். பிறகு, தாவுத் ஷா ஆட்சிக்கு வந்தார். இவரும் அடிமை ஒருவனால் குல்பர்கா கோட்டை மசூதியில் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. 1378 லிருந்து 1397 வரை மஹ்முத் ஷாவின் மகன் இரண்டாம் முஹம்மது ஷா ஆட்சிக்கு வந்தார். பஹாமனி சுல்தானேட் ஆட்சியில் மிகவும் அமைதியான ஆட்சி இவருடையது தான். இவருக்கு குழந்தைகள் இல்லாததால் தனது மாமன் அஹ்மது கானின் மகன்கள் ஃப்ரோஷ் ஷா மற்றும் முதலாம் அஹ்மது ஆகிய இரு குழந்தைகளை தத்து எடுத்துக்கொண்டார். பிறகு, தஹ்மதன் ஷா என்னும் மகன் பிறக்க, டைபாயிட் எனும் கடுமையான காய்ச்சலில் இறக்கும் தருவாயில் தஹ்மதன் ஷாவே தனக்குப் பிறகு ஆள வேண்டும் என உத்தரவிடுகிறார்.
                                           அதன்படி 1397 ல் கியாசுத்தீன் தஹ்மதன் ஷா பதவிக்கு வருகிறார். டகால்சின் என்னும் துருக்கிய அடிமை பதவிக்கு ஆசைப்பட்டு, பெரிய விருந்து ஏற்பாடு செய்து ராஜா தஹ்மதன் ஷாவை அழைத்து கண்களைப் பிடுங்கி சாகர் சிறையில் அடைத்தான். பின் தனது ஒன்று விட்ட சகோதரன் இரண்டாம் ஷம்சுத்தின் தாவுத் என்பவனை பதவியில் அமர்த்தினான். தன்னை பதவியில் அமர்த்திய டகால்சினுக்கு ஒன்றும் செய்யாமல், இரண்டாம் ஷம்சுத்தின் தாவுத் தனது அடிமைத் தாயை “மக்துமா இ ஜஹான்” என்னும் சிறப்பிற்கு வைத்தான். சரியான சந்தர்ப்பத்தில் தர்பார் மண்டபத்திலேயே டகால்சினும், அவன் மகனும் இரண்டாம் ஷம்சுத்தின் தாவுத்தை தாக்கி அவன் கண்களைப் பிடிங்கி அவன் தாயாருடன் மக்காவுக்கு அனுப்பி விட்டனர். இரண்டாம் ஷம்சுத்தின் தாவுத் 1414 ல் மக்காவில் மரணமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.1397 லிருந்து 1422 வரை தாஜுத்தீன் ஃபிரோஷ் ஷா ஆட்சிக்கு வந்தார். இவர் மிகவும் புகழுக்குரியவர். சிறந்த கவிஞர். இவரின் உருஜி மற்றும் ஃபிரோஷி கவிதைகள் மிகவும் பெயர்பெற்றது. தௌலதாபாத் மலைத்தொடர்களில் இவர் துவங்கிய பலகாட் என்னும் வானிலை ஆராய்ச்சி மையம் முடிவதற்குள் இவர் மரணமடைந்து விட்டார். தனது சகோதரன் அஹ்மதுகானுடனான ஒரு போரில் தோல்வியுற்று 1422 ல் மரணமடைந்தார். மேற்சொன்ன அனைத்து மன்னர்களுக்கும் தலை நகரமாக குல்பர்கா விளங்கியது.
                                        பிதாரை தலைநகரமாகக் கொண்ட பஹாமனிகளின் ஆட்சி 116 ஆண்டுகளாக நடந்தது. 1422 லிருந்து 1436 வரை முதலாம் அஹ்மது ஷா (அஹ்மது ஷா அல் வலி பஹாமனி அல்லது ஷிஹாபுத்தீன் முதலாம் அஹ்மது) வின் ஆட்சி அமைந்தது. இவரது ஆட்சியில் ஹஜ்ரத் க்வாஜா சையத் முஹம்மது கெசு த்ராஸ் என்னும் மார்க்க அறிஞர் மரணமடைந்து முதலாம் அஹ்மது ஷாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் குல்பர்காவிலிருந்து தலைநகரை பிதாருக்கு மாற்றினார். கலாஃப் ஹசன் பஸ்ரி என்பவரை பிரதம மந்திரியாக அமர்த்தினார். குல்பர்காவில் கெசு தராஸ் என்னும் கோபுரம் அமைத்தார். விஜயநகரம் மற்றும் விஜயராயா மீது போர் தொடுத்தார். நோய்வாய் பட்டு தான் மரணிக்கும் முன் தனது மூத்த மகன் அலாவுத்தீன் ஸ்ஃபர் கானிடம் ஆட்சிப் பொருப்பை ஒப்படைத்தார். கலைகளில் மிகவும் ஆர்வமுள்ளவராக இருந்தார். இரானிய தேசத்திலிருந்து பொன், வெள்ளியில் துத்தநாகத்தை திறம்பட இணைக்கும் அப்துல்லா பின் கைய்சர் என்னும் கலைஞரை வரவழைத்தார். முதலாம் அஹ்மது ஷா மற்றும் இவரது மனைவியின் அடக்கவிடம் பிதார் மாவட்டத்தில் அஷ்தூர் கிராமத்தில் இருக்கிறது. ஆண்டுதோறும் உர்ஸ் என்னும் விழா எடுக்கும் வைபவம் இங்கு நடைபெறு கிறது.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பெர்ஷிய வரலாறு 6



661 (C.E.) உமையாத் கலீஃபாக்கள் ஆண்டனர். பெர்ஷிய நிர்வாகத்தையே மேற்கொண்டனர். அரபு மொழி ஆட்சி மொழியானது.
750 (C.E.) உமய்யாத்களின் ஆட்சி பிடிக்காத பெர்ஷியர்கள் பொருளையும், ஆதரவையும் தந்து அப்பாஸிட்கள் ஆட்சியை வரவேற்றனர். அப்பாஸிட்கள் டமாஸ்கசில் இருந்த இஸ்லாமிய தலைநகரை சஸ்ஸானிய தலைநகரம் செஸிபோனுக்கு அருகிலுள்ள பாக்தாதுக்கு மாற்றினார்கள். இது பெர்ஷியர்களை இஸ்லாமியர்கள் அடையாளத்துக்கு மாற்றியது.
820 (C.E.)  80 ஆண்டுகாலமாக ஈரானின் சில பகுதிகளை அரபுகள் ஆண்டார்கள். சிறிது சிறிதாக பெர்ஷியர்களின் கை மீண்டும் ஓங்க அரபுகள் பெர்ஷியாவை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளானார்கள். பெர்ஷியாவுக்குள்ளேயே சிறியதாக பல ஆட்சிகள் தஹிரிட்ஸ் (821-873), ஸஃப்ஃபாரிட்ஸ் (867-903) சமானிட்ஸ் (873-999) ஸியாரிட்ஸ் (928-1077) மற்றும் புயிட்ஸ் (945-1055) என்று ஆண்டார்கள். பெர்ஷிய மொழி மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டது. சமானிட்கள் தான் அதை முதலில் செய்தார்கள். மீண்டும் பெர்ஷியா கலை, கலாச்சாரம், இலக்கியத்தில் உலகதரத்திற்கு உயர்ந்தது.
850 (C.E.) உலகின் முதல் கணிதவியலாளரும், வானாராய்ச்சியாளரும், அல்ஜீப்ரா என்னும் கணித நுணுக்கத்தை கண்டுபிடித்தவருமான க்வராஸ்மி பெர்ஷியாவைச் சேர்ந்தவர். அல்ஜீப்ரா அவரின் சொந்த பெயரான அல்கோரித்ம் என்பதிலிருந்து வந்தது. கணிதத்தில் பூஜ்ஜியத்தை இணைத்து ஒருபடை ஆரம்ப கணக்கை இருபடையாக முடித்தார்.
865 (C.E.) ராஸி என்ற உலகப்புகழ் வாய்ந்த பௌதிகவாளரும், தத்துவ மற்றும் இரசாயன ஆராய்ச்சியாளர் தோன்றினார். மருத்துவத்திற்கு தேவையான ஆல்கஹாலைக் கண்டுபிடித்தார். மருந்துகளைப் பற்றி பல புத்தகங்களை எழுதினார். சின்னம்மை, தட்டம்மை பற்றி இவர் எழுதிய ஆராய்ச்சி புத்தகம் ஐரோப்பாவில் பல மொழிகளில் வெளியிடப்பட்டது.
980 (C.E.)  உலகப்புகழ் வாய்ந்த அவிசின்னா சினா என்னும் மருத்துவ தத்துவ ஆராய்ச்சியாளர் இருந்தார். இவரின் “கேனன் ஆஃப் மெடிசின்” உள்பட 200 அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார்.
1220 (C.E.) மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கான் என்பவன் சரித்திரத்தில் அதுவரை இல்லாத கொடூரத்துடன் பெர்ஷியாவைத் தாக்கினான். வடகிழக்கு ஈரானில் ஹுலகு கான் என்பவன் பல நகரங்களை நிர்மூலமாக்கி, நூலகங்களையும், மருத்துவமனைகளையும் தீயிட்டு கொளுத்தி 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களைக் கொன்றான்.
1227 (C.E.)  ஜெங்கிஸ்கான் இறந்த பிறகு, அவரின் மகன்களால் பேரரசு பிரிந்தது. பெர்ஷியாவை உள்ளடக்கிய பகுதிகள் இரண்டாம் கானித் பேரரசாக உருவாகியது. மங்கோலியர்கள் தங்கள் பகுதிகளை ஈரோஷியாவில் தனுபே நதி வரை வளர்த்தார்கள். மார்கோ போலோ என்னும் பிரசித்தி பெற்ற கடலாடி பயணி பெர்ஷியா வழியாக சீனா சென்றார். இவரின் குறிப்பில் பெர்ஷியாவின் மங்கோலிய வெறியாட்டத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
1207 (C.E.) ரூமி (மௌலானா) என்ற புகழ்பெற்ற பெர்ஷிய கவிஞர் இருந்தார். இவரின் “மத்னவி” என்ற புத்தகம் சூஃபியிசம் என்ற கொள்கைகளைக் கொண்டதாக இருந்தது. இவரின் பெற்றோர்கள் மங்கோலியர்களின் கொடுமைக்கு பயந்து அனடோலியாவில் வாழ்ந்தனர். ரூமியின் சூஃபிச கொள்கை பரவலாக இஸ்லாத்தில் இருக்கிறது. இவரின் கவிதைகள் உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. B.B.C. செய்தி நிறுவனம் உலகின் அதிகப்புகழ் வாய்ந்த கவிஞர் என்று இவரைப் புகழ்கிறது.
1295 (C.E.) கஸன் கான் என்ற முதல் மங்கோலிய மன்னன் இஸ்லாமை தழுவியதாக பெர்ஷிய வரலாறு கூறுகிறது.
1405 (C.E.) திமூர் (டேமெர்லேன்) என்ற துருக்கி மங்கோலிய மன்னன் பெர்ஷியாவின் பல இடங்களைக் கைப்பற்றுகிறான். இவனும் பலரைக் கொன்றான். சம்ர்கண்டை தலைநகரமாக்கி அதை கலைஞர்களைக் கொண்டு அழகு படுத்தினான். இந்தியாவின் டெல்லியில் 80,000 மக்களை பதற பதற தீயிட்டு கொளுத்தியது இன்றளவும் மறக்க முடியாதது. அதிலிருந்து டெல்லி நகரம் மீளவே நூறாண்டுகளுக்கும் மேலானது. டேமெர்லேனின் மறைவிற்குப் பிறகு, அவனின் சந்ததி நூறாண்டுகளுக்கும் மேலாக பெர்ஷியாவின் சில பகுதிகளை ஆண்டது.
1501 (C.E.) ஒன்பது நூற்றாண்டுகளுக்கும் மேலாக அந்நிய ஆதிக்கத்திலிருந்த பெர்ஷியாவை முதலாம் ஷா இஸ்மாயில் என்ற இஸ்லாமிய ஷியா பிரிவு தலைவர் ஒன்றிணைத்தார். பரவலாக இருந்த இஸ்லாமிய சுன்னி பிரிவு மக்களை ஷியா பிரிவுக்கு திருப்பி ஷியா கொள்கை நாடாக ஆக்கினார். அப்போதிருந்த சஃபாவித் மன்னர்கள் இதை ஆதரித்தார்கள்.
1587 (C.E.)  சஃபாவித் பேரரசில் ஷா அப்பாஸ் என்பவர் பலமான இராணுவத்தை அமைத்து ஓட்டோமான்களை வீழ்த்தினார். ஈரானின் இஸ்ஃபஹானை தலைநகரமாக்கினார். இஸ்ஃபஹானை கலை, கட்டிடங்கள் என்று புகழ்பெறச் செய்தார். பல மசூதிகளையும், பள்ளிகள், பாலங்கள், கடை வீதிகள் என்று அமைத்தார். ஈரானில் கலையை மிகவும் உச்சிக்கு கொண்டு வந்தார். ஒரே நேரத்தில் பெர்ஷிய கலைகளை சஃபாவித்கள், ஓட்டோமான் கள், இந்திய மொகலாயர்கள் பரப்பினார்கள். தாஜ்மஹாலின் அடிப்படை வடிவமைப்பாளர் உஸ்தாத் இசாத் என்ற பெர்ஷியர் என்று கூறப்படுகிறது.
1722 (C.E.)  ஆஃப்கானிலிருந்து மஹ்மூத் கான் (மொகுல் கான்) என்பவர் படையெடுத்து பெர்ஷியாவின் இஸ்ஃபஹானைக் கைப்பற்றி சஃபாவித்களின் பேரரசை முடிவுக்கு கொண்டுவந்தார். சஃபாவித்களின் நாதர் ஷா என்பவர் ஆஃப்கானியர்களை விரட்டி, மீண்டும் பெர்ஷியாவை ஒருங்கிணைத்தார். இவரது அபாரமான போர் திறமையால், ஓட்டோமான்கள், ரஷ்யர்கள், இந்தியர்கள் மற்றும் பல பழங்குடியினர்களை வென்றார். இவர் மொகலாய இந்தியாவில் படையெடுத்த போது உலகின் தலைசிறந்த சீ ஆஃப் லைட் என்னும் வைரத்தையும், தற்போது பிரிட்டிஷ் கிரீடத்தில் இருக்கும் மவுண்ட் ஆஃப் லைட் என்னும் வைரத்தையும் கைப்பற்றினார். தனது சொந்த பாதுகாப்பு படையினராலேயே கொல்லப்பட்டார். இவருக்குப் பிறகு, இவரது இராணுவம் சிதறுண்டது.
1747 (C.E.) கரீம் கான் ஸண்ட் என்பவர் மத்திய தென் ஈரானைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இவர் ஷா என்னும் பாரம்பரிய பெயரை சேர்த்துக் கொள்ளாமல் மக்களின் ஆட்சியாக்கினார். கஜார் என்னும் பழங்குடி எதிரிகளிடம் சண்டையிட்டார். இவர் மறைவிற்குப் பின் அகா முஹம்மது கான் கஜார் என்பவர், கஜார்களின் ஆட்சியாக கஜார் பேரரசை நிறுவினார். இவர் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது. நிர்வாகம் சீர் குலைந்தது. கஜார்களின் காலத்தில் ஓவியம், பளிங்கு கற்கள் மற்றும் கட்டிடக்கலைகள் சிறந்து விளங்கின.
1813 (C.E.)  ஆங்கிலேய மற்றும் ரஷ்யர்களின் ஐரோப்பிய ஏகாதிபத்யம் ஈரானில் தலை தூக்கியது. கஜார்கள் குலிஸ்தான், துர்க்மன்சாய் போர்களில் காகஸை (தற்போதைய ஜியார்ஜியா, அர்மேனியா, அஜர்பைஜான்) இழந்தார்கள். வெளிநாட்டு சட்டங்கள் ஈரானியர்கள் மீது திணிக்கப்பட்டது.
1851 (C.E.) கஜார்கள் மத்திய ஆசிய பகுதிகளை ரஷ்யர்களிடமும், ஆப்கானிஸ்தான் பகுதிகளை பிர்ட்டிஷாரிடமும் இழந்தார்கள். இந்த இரு அன்னிய சக்திகளும் ஈரானின் வாணிபத்தையும் (இன்றைக்கும் ஈரான் மிகப் பெரிய வாணிபம் நடத்தப்படும் நாடு) உள்நாட்டு அரசியலையும் கட்டுப்படுத்தின. கஜார்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு விலைமதிக்கத்தக்க பலவற்றை பிரிட்டிஷார்களுக்கு விட்டுக் கொடுத்தனர்.
1906 (C.E.) கஜார்களின் லஞ்ச லாவண்யத்தால் புரட்சி ஏற்பட்டு ஈரானின் முதல் மஜ்லிஸ் பாராளுமன்றம் உதயமானது. தெற்கில் ரஷ்யாவும், கிழக்கில் பிரிட்டனும் ஈரானைக் கட்டுப்படுத்தின. முதலாம் உலகப்போரின் முடிவில் ஈரான் அரசியல், சமூக, பொருளாதாரத்தில் முற்றிலும் மூழ்கியது.
1921 (C.E.) ரேஸா கான் என்னும் இராணுவ அதிகாரி புரட்சி செய்து முதல் மந்திரி ஆனார். அவர் ஷா என்னும் பட்டப்பெயரை சூட்டிக் கொள்ள விரும்பினார். ஏறக்குறைய பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ரேஸா ஷா தான் சஸ்ஸானியர்கள் விட்ட இடத்திலிருந்து ஈரானை சீர்படுத்தினார். இவர் ஈரானின் முக்கிய பேரரசாக விளங்கிய பஹ்லாவி பேரரசின் வழி வந்தவர். முதலில் இராணுவத்தை நிலைப்படுத்தி, அனைத்து பழங்குடியினரையும் ஒன்று படுத்தினார். நவீன பள்ளிகள், கல்லூரிகள் கட்டினார். பெண்களை வேலைக்கு அமர்த்தினார். ஈரானில் முதல் தொழில்புரட்சியை உண்டாக்கி பல சாலைகள், பாலங்கள், சொந்த தொழிற்கூடங்களை கொண்டு வந்தார். முதல் ஈரானிய இரயில் போக்குவரத்தையும் துவங்கினார். அனைத்து வெளிநாட்டு அலுவல்களிலும் பெர்ஷியா என்பதை நீக்கி ஈரான் என்று குறிப்பிடச் செய்தார். இரண்டாம் உலகப்போரில் யார் பக்கமும் ஆதரவளிக்காமல் இருந்தார்.
1941 (C.E.) போருக்கான தளவாடங்களை இடம் மாற்ற ரஷ்யாவின் கூட்டுப் படைகள் ஈரானின் இரயில் தட பகுதிகளை ஆக்கிரமித்தன. ஷா தனது மகன் முஹம்மது ரேஸாவிடம் ஆட்சிப் பொறுப்பை விட்டு தென் ஆப்பிரிக்காவில் மரணமடைந்தார். ஈரானின் கூட்டு நாடுகளின் மற்றும் அமெரிக்க நெருக்குதலாலும், சோவியத் ஈரானின் வடமேற்குப் பகுதியை விட்டு விலகியது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஸ்டாலின் விட்டுக்கொடுத்த முதல் பகுதி ஈரானாகும்.
1951 (C.E.) டாக்டர் மொஸ்ஸாடிக் என்பவர் ஈரானிய மஜ்லிஸ் பாராளுமன்றத்தில் தேசிய எண்ணெய் வளத்தை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் விட்டார். சில பிரச்சினைகளில் பிரிட்டிஷ் தன் வசமிருந்த ஈரானின் ஸ்டெர்லிங்க் கணக்குகளை முடக்கி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தீர்ப்பு ஈரானுக்கு சாதகமாகியது. கோபமுற்ற பிரிட்டிஷ் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது. பிரிட்டிஷின் ஈரானின் உள்நாட்டு புரட்சியின் மூலம் டாக்டர் மொஸ்ஸாடிக் அரசு நீக்கப்பட்டு, ஷா பதவியில் வைக்கப்பட்டார். ஷா புதிய கொள்கையாக வெள்ளைப்புரட்சி என்று நிலங்கள், தொழிலாளர் நலம், பெண்கள் முன்னேற்றம் என்று கொண்டு வந்தார். இவைகளை அயாத்துல்லாஹ் கோமெய்னி என்பவர் எதிர்த்தார். அவரை ஷா அரசாங்கம் சிறைப்பிடித்தது. 19 திருத்தங்களில் 15 ஆண்டுகாலத்தில் 6 திருத்தங்களை கொண்டுவந்தார்.
1973 (C.E.) ஈரானின் எண்ணெய் உற்பத்தி ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர்களை தந்தது. ஷாவின் எதிர்ப்பாளர்கள் அயாத்துல்லாஹ் கோமெய்னியின் தலைமையில் ஒன்று சேர்ந்தனர். 1979 ல் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு, ஷா தூக்கி எறியப்பட்டார். பின் எகிப்தில் மரணமடைந்தார். புதிய இஸ்லாமிய ஆட்சி அரபு இஸ்லாமிய கூட்டாக இருந்தது. ஈரானில் பஹ்லவி வழிவந்த மன்னர் முறை ஒழிந்து இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் ஈரான் என்று மக்களாட்சி தோன்றியது.

பெர்ஷிய வரலாறு 5



பார்த்தியன்களின் காலம் பெர்ஷிய பேரரசில் ஏறக்குறைய 400 ஆண்டுகளாகும். இவர்கள் மேற்கு ஆசியாவில் ரோமர்களின் பகுதிகள் மீதும் போர் தொடுத்தார்கள்.
84 (B.C.E.) ரோமர்கள் பார்த்தியன்களின் பகுதிகளில் பலமாக முன்னேறினார்கள். அப்போதைய பெர்ஷிய பார்த்திய மன்னர் இரண்டாம் ஓரோடெஸ் பிரபலமான ஜெனரல் சுரேனா தலைமையில் பெரும்படையை அனுப்பினார். கர்ஹாயி என்ற இடத்தில் நடந்த ஆக்ரோஷமான போரில், பார்த்தியன்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு ரோமர்களை தோற்கடித்தனர். இதன் பிறகு, அந்த பகுதியில் பார்த்தியன்கள் பலமானவர்களாக கருதப்பட்டு அடிக்கடி ரோமப் பிரதேசங்கள் தாக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன. ஜெனரல் சுரேனா “ருஸ்தஹம் சூரென் பஹ்லாவ்” என்று பட்டம் சூட்டப்பட்டார். கர்ஹாயி போரில் வெறும் 10,000 வீரர்களை வைத்துக்கொண்டு, 40,000 ரோம வீரர்களைப் பந்தாடினார். ஏறக்குறைய 36,000 ரோமவீரர்கள் பார்த்தியன்களால் அப்போது கொல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதற்கு முழுக்க திறமையான பழங்குடி பார்த்திய போர் வீரர்களின் அம்பு வீச்சே காரணம். ஜெனரல் சுரேனாவின் புகழ் உச்சத்திற்கு போக, மன்னர் இரண்டாம் ஓரோடஸ் அவர் எங்கே ஆட்சியைப் பிடித்து விடுவாரோ என்று பயந்து, கூலிப்படையை வைத்து ஜெனரல் சுரேனாவை கொன்று விடுகிறார். இது பார்த்தியன்களின் போர் வரலாறில் பெரும் சரித்திரப்பிழை ஆகிவிடுகிறது. அவரைப்போல திறமையான ஜெனரல் பெர்ஷிய இராணுவத்திற்கு கிடைக்காமல் போய் விடுகிறது.
பார்த்தியன்களை சமாளிக்க ரோமர்கள் தங்கள் இராணுவத்தை மேலும், நவீனமாக புதிய ஆயுதங்களுடன் பலப்படுத்துகிறது.
198 (C.E.)  ஏசு கிறிஸ்துக்குப் பின் ஆன காலகட்டம். 83 ஆண்டுகால தொடர் போரால் இறுதியில் ரோமர்கள் பார்த்தியன் களின் பகுதிகளைத் தாக்கி நுழைகிறார்கள். பல போராளி குழுக்கள் அமைத்து பார்த்தியன்களை எல்லா பகுதிகளிலும் தாக்கினார்கள். இதனால், உள் நாட்டு குழப்பம் நிலவி ஆளும் மன்னருக்கு பெரும் நெருக்கடியைத் தந்தது. இதனால் அந்த பேரரசு வீழ்ந்தது. பழங்குடி பார்த்தியன்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் போராடி வென்று புதியதாக முதலாம் அர்டெஷிர் பபகன் என்ற மன்னர் மூலம் பெர்ஷிய “சஸ்ஸானித் பேரரசு” என்று ஒன்றை நிறுவினார்கள்.
இது வெறும் மன்னரை மாற்றியதாக இருந்து சஸ்ஸானித் இராணுவம் ஒன்று சேர்ந்தது. உள்ளுக்குள் வேறாக இருந்தாலும், பழைய மன்னரின் ஆதரவாளர்களும், புதிய சஸ்ஸானியர்களும் பல பகுதிகளில் தொடர்ந்து நூறாண்டுகளுக்கும் மேலாக ரோமர்களை எதிர்த்து களைத்துப் போனார்கள். சஸானியர்களின் போர்முறை பார்த்தியன்களை விட திறமையாக இருந்தது. மேலும், போர் முறை ரோமர்களிடமிருந்து தடுப்பதிலிருந்து, ரோமர்களைத் தாக்குவதாக இருந்தது. ஒருவாராக ரோமர்களை அடக்கினார்கள்.   
ரோமர்களுடன் இவர்கள் நடத்திய பல போர்களை கற்களில் வடித்திருந்தார்கள். இவைகள் பெர்ஷிய பாரம்பரியமாகக் கருதப்படுகின்றன. மேலும், பழைய பெர்ஷிய எல்லைகளை சீர்படுத்தினார்கள். மெடிட்டரேனியன் கடல் பகுதி வரையிலும், ரோமர்களிடமிருந்து எகிப்தையும் மீட்டெடுத்தார்கள். இந்த சஸானியர்கள் மதத்தால் “ஸோரோஸ்ட்ரியன்” களாக இருந்தார்கள். அக்காயிமெனிட்களுக்குப் பிறகு, பெர்ஷிய கலாச்சாரத்தில் இரண்டாவதாக இருந்தார்கள். இவர்கள் தங்களை அக்காயிமெனிட்களின் இனமாகவே கருதினார்கள். பல விதத்திலும் பெர்ஷிய நாகரீகத்தை வளர்த்தார்கள். சஸானியர்கள் கடைசி ஸோரோஸ்ட்ரிய பெர்ஷிய பேரரசாக பலமாக இருந்தது. எதிரியாக இருந்தாலும் ரோமர், பைசாந்தியர் மற்றும் சீனர்களுடன் வாணிபத் தொடர்பு வைத்திருந்தார்கள். சூரியனின் கீழ் வளமான பிரதேசமான பெர்ஷியாவை வெல்வது ரோமர்களின் தாரகமந்திரமாக இருந்தது. பெர்ஷியர்களும், கிரேக்கர்களும் ரோமர்களை இரத்தவெறி பிடித்த காட்டுமிராண்டிகளாகவே கருதினார்கள்.
6500 கிலோமீட்டர் நீளம் கொண்ட சரித்திரப்புகழ் வாய்ந்த “சில்க் ரோடு” பெர்ஷியர்களின் வளத்தை என்றைக்கும் பறை சாற்றுகின்றது. முதலாம் அர்தேஷிருக்குப் பிறகு, அவர் மகன் ஷபுர் மிகவும் பிரபலமானவர். ரோமர்களின் மூன்று பேரரசர்கள் வளேரியனஸ், மூன்றாம் கார்டியனஸ் மற்றும் பிலிப் ஆகியோரை வென்று ரோமர்களை அலற வைத்தார். ஷபுர் என்றால் ராஜாவின் மகன் என்று பொருள். இவர் ஜொண்டி ஷாபுர் பலகலைக் கழகம் என்று உயர்கல்வி நிறுவனத்தை நிறுவினார்.
இடையில் தூதர் மணி என்பவர் தோன்றி “மனிக்காயிசம்” என்ற புதிய மதத்தை தோற்றிவித்தார். அது ஸோரோஸ்ட்ரியம், புத்தமதம், கிறிஸ்தவம் மற்றும் இந்து மதங்களின் கூட்டாக இருந்தது. இது மன்னர் ஷபுரைக் கவர்ந்தது. இதனால் இவரின் போதனைகள் ஸோரோஸ்ட்ரிய பாதிரிகளுக்கு எதிராக இருந்தது. மன்னர் ஷபுர் இறக்கவே தூதர் மணி பெர்ஷியாவை விட்டு விலகினார். பின் கிழக்குப்பகுதிக்கு சென்று மித்ராயிஸம் என்று சில கொள்கைகளைப் பரப்பினார். தான் கிறிஸ்துவின் சீடர் என்று கூறிக் கொண்டார். இவர் மீண்டும் பெர்ஷியா திரும்பிய பொழுது பேரரசர் பஹ்ரமால் சிறைப்பிடித்து கொடுமை செய்யப்பட்டார்.
488 (C.E.)  பம்தாத் என்னும் ஸோரோஸ்ட்ரிய பாதிரியின் மகன் மஸ்தாக் என்பவர் “மஸ்தகிஸம்” என்ற தத்துவத்தைப் போதித்தார். அது மனிதர்கள் அனைவரும் சமம், பிறர் சொத்தை அபகரிப்பது, கடுமையாக நடந்து கொள்ளாமை மற்றும் சைவமாக இருப்பது ஆகியவையாகும். இது கல்வியறிவு பெற்றவர்களுக்கும், அப்பாவி மக்களுக்கும் இடையே பெரும் பிரிவினையை உண்டாக்கியது. இது மஸ்தாக்கின் ஆதரவாளர்களை அரண்மனையை நோக்கி எதிர்க்க தூண்டியது. அரசியல்வாதிகளாலும், செல்வந்தர்களாலும் 528 ல் மஸ்தாக்கிஸம் விலக்கப்பட்டது. இந்த மஸ்தாக்கிஸமே மார்க்ஸுக்கு முந்தைய உலகின் முதல் சோஷியலிசமாகக் கருதப்படுகிறது.
531 (C.E.)  சஸானிய பேரரசின் முதலாம் கோஸ்ரோவ் (அனுஷிரவன்) என்பவர் ரோமர்களை வென்று பெர்ஷியர்களின் பெருமையை உயர்த்தினார். இவர் இந்திய, கிரேக்க மருத்துவ மற்றும் சயின்ஸ் புத்தகங்களை பெர்ஷிய மற்றும் பஹ்லாவி மொழிகளில் மொழி பெயர்த்தார். முதலாம் கோஸ்ரோவ் மற்றும் ஜொண்டி ஷபுரின் நூலகம் உலகின் மிகப் பெரிய நூலகமாகக் கருதப்படுகிறது. முதலாம் கோஸ்ரோவின் பிரதம மந்திரியாக இருந்த போஸோர்ட்மெஹ்ர் என்பவர் தான் உலகப் பிரசித்தி பெற்ற “பேக்கம்மான்” (BACKGAMMON)  என்ற விளையாட்டைக் கண்டுபிடித்தார்.
590 (C.E.)  மன்னர் கோஸ்ரோவ் பர்விஸுக்கு ஷிரின் என்ற மனைவி இருந்தார். இவர் பெர்ஷிய சஸ்ஸானிட் பேரரசின் ராணியுமாவார். இவர் பெர்ஷிய இராணுவத்தில் கமாண்டராகவும் இருந்து பைசாந்தியர்களுடன் பல போர்களை வென்றிருக்கிறார். ஷிரின் கிறிஸ்துவராக இருந்தார். ஒருமுறை தாக்க வந்த சிங்கம் ஒன்றிடமிருந்து ஷிரினை மன்னர் கோஸ்ரோவ் காப்பாற்ற இவர்களுக்குள் காதல் அரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள். கோஸ்ரோவ் மேற்கு ஈரானில் கெர்மன்ஷா பகுதியில் ராணி ஷிரின் பெயரில் அற்புதமான அரண்மனைகளைக் கட்டினார். தற்போது அவைகள் “கஸ்ர் இ ஷிரின்” என்று அழைக்கப்படுகிறது.
608 (C.E.) பெர்ஷியர்களுக்கும், பைசாந்தியர்களுக்கும் நிகழ்ந்த பல போர்களால் இருவருமே பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டும், பல உயிர் சேதங்களும் நிகழ்ந்தன. இருவரும் பகையாகவே இருந்தனர்.
629 (C.E.) கோஸ்ரோவ் பர்விஸின் மகள் புரண்டோக்ட் என்பவர் 26 வது சஸ்ஸானிய ராணி ஆவார். இவரது மூத்த சகோதரி அஸர்மிடோக்ட் ஆவார். இவர் சஸ்ஸானிய பேரரசில் நீதி நேர்மைகளை நிலையாட்டி, வரிகளைக் குறைத்தும், புதியதாக நாணயங்களையும் வெளியிட்டார். பைசாந்தியர்களுடனான போரில் பாதிக்கப்பட்டிருந்த பெர்ஷியாவை முன்னேற்றுவதில் பெரும் தோல்வியையே சந்தித்தார். அதனால், ராஜினாமா செய்தார்.
630 (C.E.) மன்னர் கோஸ்ரோவ் பர்விஸின் இளைய மகள் துரண்டோக்ட் இளவரசியாக இருந்தார். இவரைப்பற்றிய அதிகமான கதைகள் ஐரோப்பியர்களிடம் உண்டு. ஆயிரத்தோறு இரவுகள் என்ற கதைத் தொகுப்பிலும் இவரது கதை உண்டு. துரண் என்ற பெர்ஷிய பெயர் மத்திய ஆசியாவில் மிகவும் புகழ் வாய்ந்தது. உண்மையான துரானியன்கள் அவிஸ்டா காலம் என்னும் 1737 (B.C.E.)  க்கு முற்பட்ட துரிய ஈரானிய மக்களைக் குறிக்கும்.
634 (C.E.) மன்னர் கோஸ்ரோவ் மரணமடைந்த பிறகு, பெர்ஷியாவில் உள் நாட்டு கலவரங்களும், பைசாந்தியர்களுடனான போரும் நடந்தன. அதே நேரத்தில் தென்பகுதி பழங்குடி அரேபியர்களிடமிருந்தும் தாக்குதல்கள் வந்தன. பெர்ஷிய மன்னர் மூன்றாம் யஸ்டிகெர்ட் பைசாந்தியர்களுக்கு மட்டுமே பயந்தார். அதனால் இஸ்லாமியர்கள் படையெடுப்பை பொருட்படுத்தவில்லை. இஸ்லாமியர்களிடமிருந்து முதல் போர் சஸ்ஸானியர்கள் மீது பிரிட்ஜ் என்னும் இடத்தில் நடந்தது. இதில் சஸ்ஸானியர்கள் வெற்றி பெற்றனர். இருந்தாலும் ஒருங்கிணைந்த இஸ்லாமியர்கள் பெர்ஷியாவின் தென்பகுதி எல்லையைத் தாக்கினார்கள். மன்னர் மூன்றாம் யஸ்டிகெர்டிடம் ரோஸ்டம் ஃபர்ரோக்ஸட் என்பவர் பெர்ஷிய இராணுவத்தில் கவர்னராக இருந்தார். இவர் செஸிஃபோன் (CTESIPHON) என்ற இடத்தை ரோமர்களிடமிருந்து வென்று, அதை பெர்ஷியாவின் தலைநகரமாக்கினார். பலமுறை ரோமானியர்களை வென்றார். அர்மேனியாவையும், மெஸோபொடாமியாவையும் வென்று பெர்ஷியாவில் இணைத்தார். ‘நிஹாவண்ட் போரில்’ பெருமளவில் அரேபியர்கள் எதிர்த்தார்கள். பலமுறை அரபுகள் தோற்றிருந்தாலும், கடைசி சஸ்ஸானிய மன்னர் யஸ்டிகெர்டுக்கு இந்த முறை சற்று சந்தேகமாக இருந்தது. 700 ஆண்டுகளாக ரோமானியர்களுடன் நடந்த போரில் பெர்ஷியர்கள் பொருளாதாரம், இராணுவம் மற்றும் பல உயிர்களை இழந்திருந்தார்கள். மன்னரோ தெற்கிலிருந்து வந்த அரபுகளின் எதிர்ப்பை பெரிதும் பொருட்படுத்தாது இருந்தார். பெர்ஷியாவில் எப்போதுமே ஒரு துரோக கூட்டம் இருந்தது. அவர்கள் ரோமர்களிடமும், அரபுகளிடமும் விலை போனார்கள். முதலில் பெர்ஷிய எல்லைகள் இஸ்லாமியர்கள் வசம் விழுந்தன. பின் முழுவதுமாக இஸ்லாமியர்கள் பெர்ஷிய சஸ்ஸானிய பேரரசைக் கைப்பற்றினார்கள். மன்னர் மூன்றாம் யஸ்டிகெர்ட் ஓடிப்போய் தலைமறைவானார்.