மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 4 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 12



பாகம் : 12
ஸலாவுத்தீன் தனக்கெதிரான ஒவ்வொரு தடைகளையும் கவன மாக நீக்கினார். மிக குறுகிய இடைவெளியில் கிழக்கு பகுதியில் முஸ்லீம்களின் சிறந்த தலைவராக விளங்கினார். தலையாய விதி அவரை தேர்ந்தெடுத்து அவ்வப்போது சிலுவைப் போராளிகளிட மிருந்து முஸ்லீம்களை காப்பாற்றச் செய்தது.
நூருத்தீனுக்கு பிறகு சிரியா
“ அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான் அவன் அவர்களை நேசிப்பான். அவனை அவர்களும் நேசிப்பார்கள். அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள். காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள். இது அல்லாஹ்வின் அருட் கொடையாகும்.” (அல் மாயிதா 5:54)
நூருத்தீன் இறப்பிற்குப் பிறகு, பரம்பரை வாரிசாக அவர் மகன் அல் மாலிக் அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் பதவிக்கு வந்தார். வெறும் 11 வயதே ஆனவரானதால் அவருக்கு ஆதரவு இல்லை. ஷம்ஸ் அத்தீன் இப்னு அல் முகத்திம் என்பவர் அவருக்கு காப்பாளராகவும், நிர்வாகஸ்தராகவும் இருந்தார். சிரியாவின் இளவரசர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டும், அவதூறு கூறியும், மற்றவரை பலவீனப் படுத்தியும், வீழ்த்துவதிலும் குறியாய் இருந்தனர். சிறு வயது அல் மாலிக் நாட்டின் நடப்பு தெரியாமல் இருந்தார். மற்ற இளவரசர்கள் ஆட்சியை ஆக்கிரமித்து கொண்டு அவரை கைப் பொம்மையாக வைத்திருந்தனர். மோஸூலின் ஆட்சியாளராக இருந்த அல் மாலிக்கின் உறவினன் ஸைஃப் அத்தீன் என்பவன் நூருத்தீனின் நகரான அல் ஜஸீராஹ்வை (டிக்ரிஸ் மற்றும் யூப்ரடிஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி) கைப்பற்றி மற்ற இளவர சர்களை ஆள்வதற்கு அனுமதி அளித்தார். சில இளவரசர்கள் சிலுவைப் போராளிகளின் உதவியை நாடி அடுத்தவரை வீழ்த்த திட்டம் தீட்டினர். அரசு நிர்வாகத்தில் பிரிவுகளும், குழப்பங்களும் தோன்றி நாட்டை பலவீனப் படுத்தின. விதி ஸலாவுத்தீனை சிரியாவில் தலையிடச் செய்து வெட்கக்கேடான செயல்களில் இருந்தும், வெறுக்கத்தக்க பிரிவினைகளில் இருந்தும் நாட்டைக் காக்கச் செய்தது.
டமாஸ்கஸில் ஸலாவுத்தீன்
ஸலாவுத்தீன் சிரியாவின் ஒழுங்கின்மையையும், தடைகளையும் நன்கு அறிவார். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். தவறான நேரத்தில் தான் தலையிடுவதால் சிரியா மக்களின் கோபத்திற்கும், எதிர்ப்புக்கும் ஆளாக நேருமோ என்று அஞ்சினார். நூருத்தீனிடம் காட்டிய அதே நேசத்தை சிறியவர் மகன் அல் மாலிக்கிடமும் காட்டினார். நூருத்தீனுக்குப் பிறகு, வெள்ளிக் கிழமை தொழுகை போதனைகளை அவர் பெயரில் துவங்கியும், அவர் பெயரில் நாணயங்கள் வெளியிட்டும் அவர் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பது போல் காட்டிக் கொண்டார்.
டமாஸ்கஸ் மக்கள் ஸைஃப் அத்தீன் அல் ஜஸீராஹ்வை கைப்பற்றிக் கொண்டதும், சிறுவர் அல் மாலிக்கின் பாதுகாவலர் ஷம்ஸ் அத்தீன் கள்ளத்தனமாக ஜெருசலத்தின் சிலுவைப் போராளிகளுடன் உறவு வைத்திருப்பதும், நூருத்தீனின் மற்ற இளவரசர்கள் ஆட்சியில் தலையிட்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதையும் நன்கு அறிந்திருந்தனர். வேறு வழி யோசிக்காமல் அம் மக்கள் ஸலாவுத்தீனுக்கு செய்தி அனுப்பி தங்கள் நாட்டைக் கைப்பற்றி  குழப்பங்களுக்கு முடிவு கட்டி, தீயவர்களின் கைகளிலிருந்து விடுவித்து அவரையே ஆளும்படி வேண்டினர். தனது வலிமையின் வாயிலாக செய்ய வேண்டியதை அவர் நினைத்தபடி சிரிய மக்களின் வேண்டுதல் வாயிலாக செய்ய வேண்டிய நேரம் வந்தது. அவரின் பொறுமைக்கு முற்றுப் புள்ளி விழுந்தது.

கருத்துகள் இல்லை: