மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பெர்ஷிய வரலாறு 5



பார்த்தியன்களின் காலம் பெர்ஷிய பேரரசில் ஏறக்குறைய 400 ஆண்டுகளாகும். இவர்கள் மேற்கு ஆசியாவில் ரோமர்களின் பகுதிகள் மீதும் போர் தொடுத்தார்கள்.
84 (B.C.E.) ரோமர்கள் பார்த்தியன்களின் பகுதிகளில் பலமாக முன்னேறினார்கள். அப்போதைய பெர்ஷிய பார்த்திய மன்னர் இரண்டாம் ஓரோடெஸ் பிரபலமான ஜெனரல் சுரேனா தலைமையில் பெரும்படையை அனுப்பினார். கர்ஹாயி என்ற இடத்தில் நடந்த ஆக்ரோஷமான போரில், பார்த்தியன்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு ரோமர்களை தோற்கடித்தனர். இதன் பிறகு, அந்த பகுதியில் பார்த்தியன்கள் பலமானவர்களாக கருதப்பட்டு அடிக்கடி ரோமப் பிரதேசங்கள் தாக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன. ஜெனரல் சுரேனா “ருஸ்தஹம் சூரென் பஹ்லாவ்” என்று பட்டம் சூட்டப்பட்டார். கர்ஹாயி போரில் வெறும் 10,000 வீரர்களை வைத்துக்கொண்டு, 40,000 ரோம வீரர்களைப் பந்தாடினார். ஏறக்குறைய 36,000 ரோமவீரர்கள் பார்த்தியன்களால் அப்போது கொல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதற்கு முழுக்க திறமையான பழங்குடி பார்த்திய போர் வீரர்களின் அம்பு வீச்சே காரணம். ஜெனரல் சுரேனாவின் புகழ் உச்சத்திற்கு போக, மன்னர் இரண்டாம் ஓரோடஸ் அவர் எங்கே ஆட்சியைப் பிடித்து விடுவாரோ என்று பயந்து, கூலிப்படையை வைத்து ஜெனரல் சுரேனாவை கொன்று விடுகிறார். இது பார்த்தியன்களின் போர் வரலாறில் பெரும் சரித்திரப்பிழை ஆகிவிடுகிறது. அவரைப்போல திறமையான ஜெனரல் பெர்ஷிய இராணுவத்திற்கு கிடைக்காமல் போய் விடுகிறது.
பார்த்தியன்களை சமாளிக்க ரோமர்கள் தங்கள் இராணுவத்தை மேலும், நவீனமாக புதிய ஆயுதங்களுடன் பலப்படுத்துகிறது.
198 (C.E.)  ஏசு கிறிஸ்துக்குப் பின் ஆன காலகட்டம். 83 ஆண்டுகால தொடர் போரால் இறுதியில் ரோமர்கள் பார்த்தியன் களின் பகுதிகளைத் தாக்கி நுழைகிறார்கள். பல போராளி குழுக்கள் அமைத்து பார்த்தியன்களை எல்லா பகுதிகளிலும் தாக்கினார்கள். இதனால், உள் நாட்டு குழப்பம் நிலவி ஆளும் மன்னருக்கு பெரும் நெருக்கடியைத் தந்தது. இதனால் அந்த பேரரசு வீழ்ந்தது. பழங்குடி பார்த்தியன்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் போராடி வென்று புதியதாக முதலாம் அர்டெஷிர் பபகன் என்ற மன்னர் மூலம் பெர்ஷிய “சஸ்ஸானித் பேரரசு” என்று ஒன்றை நிறுவினார்கள்.
இது வெறும் மன்னரை மாற்றியதாக இருந்து சஸ்ஸானித் இராணுவம் ஒன்று சேர்ந்தது. உள்ளுக்குள் வேறாக இருந்தாலும், பழைய மன்னரின் ஆதரவாளர்களும், புதிய சஸ்ஸானியர்களும் பல பகுதிகளில் தொடர்ந்து நூறாண்டுகளுக்கும் மேலாக ரோமர்களை எதிர்த்து களைத்துப் போனார்கள். சஸானியர்களின் போர்முறை பார்த்தியன்களை விட திறமையாக இருந்தது. மேலும், போர் முறை ரோமர்களிடமிருந்து தடுப்பதிலிருந்து, ரோமர்களைத் தாக்குவதாக இருந்தது. ஒருவாராக ரோமர்களை அடக்கினார்கள்.   
ரோமர்களுடன் இவர்கள் நடத்திய பல போர்களை கற்களில் வடித்திருந்தார்கள். இவைகள் பெர்ஷிய பாரம்பரியமாகக் கருதப்படுகின்றன. மேலும், பழைய பெர்ஷிய எல்லைகளை சீர்படுத்தினார்கள். மெடிட்டரேனியன் கடல் பகுதி வரையிலும், ரோமர்களிடமிருந்து எகிப்தையும் மீட்டெடுத்தார்கள். இந்த சஸானியர்கள் மதத்தால் “ஸோரோஸ்ட்ரியன்” களாக இருந்தார்கள். அக்காயிமெனிட்களுக்குப் பிறகு, பெர்ஷிய கலாச்சாரத்தில் இரண்டாவதாக இருந்தார்கள். இவர்கள் தங்களை அக்காயிமெனிட்களின் இனமாகவே கருதினார்கள். பல விதத்திலும் பெர்ஷிய நாகரீகத்தை வளர்த்தார்கள். சஸானியர்கள் கடைசி ஸோரோஸ்ட்ரிய பெர்ஷிய பேரரசாக பலமாக இருந்தது. எதிரியாக இருந்தாலும் ரோமர், பைசாந்தியர் மற்றும் சீனர்களுடன் வாணிபத் தொடர்பு வைத்திருந்தார்கள். சூரியனின் கீழ் வளமான பிரதேசமான பெர்ஷியாவை வெல்வது ரோமர்களின் தாரகமந்திரமாக இருந்தது. பெர்ஷியர்களும், கிரேக்கர்களும் ரோமர்களை இரத்தவெறி பிடித்த காட்டுமிராண்டிகளாகவே கருதினார்கள்.
6500 கிலோமீட்டர் நீளம் கொண்ட சரித்திரப்புகழ் வாய்ந்த “சில்க் ரோடு” பெர்ஷியர்களின் வளத்தை என்றைக்கும் பறை சாற்றுகின்றது. முதலாம் அர்தேஷிருக்குப் பிறகு, அவர் மகன் ஷபுர் மிகவும் பிரபலமானவர். ரோமர்களின் மூன்று பேரரசர்கள் வளேரியனஸ், மூன்றாம் கார்டியனஸ் மற்றும் பிலிப் ஆகியோரை வென்று ரோமர்களை அலற வைத்தார். ஷபுர் என்றால் ராஜாவின் மகன் என்று பொருள். இவர் ஜொண்டி ஷாபுர் பலகலைக் கழகம் என்று உயர்கல்வி நிறுவனத்தை நிறுவினார்.
இடையில் தூதர் மணி என்பவர் தோன்றி “மனிக்காயிசம்” என்ற புதிய மதத்தை தோற்றிவித்தார். அது ஸோரோஸ்ட்ரியம், புத்தமதம், கிறிஸ்தவம் மற்றும் இந்து மதங்களின் கூட்டாக இருந்தது. இது மன்னர் ஷபுரைக் கவர்ந்தது. இதனால் இவரின் போதனைகள் ஸோரோஸ்ட்ரிய பாதிரிகளுக்கு எதிராக இருந்தது. மன்னர் ஷபுர் இறக்கவே தூதர் மணி பெர்ஷியாவை விட்டு விலகினார். பின் கிழக்குப்பகுதிக்கு சென்று மித்ராயிஸம் என்று சில கொள்கைகளைப் பரப்பினார். தான் கிறிஸ்துவின் சீடர் என்று கூறிக் கொண்டார். இவர் மீண்டும் பெர்ஷியா திரும்பிய பொழுது பேரரசர் பஹ்ரமால் சிறைப்பிடித்து கொடுமை செய்யப்பட்டார்.
488 (C.E.)  பம்தாத் என்னும் ஸோரோஸ்ட்ரிய பாதிரியின் மகன் மஸ்தாக் என்பவர் “மஸ்தகிஸம்” என்ற தத்துவத்தைப் போதித்தார். அது மனிதர்கள் அனைவரும் சமம், பிறர் சொத்தை அபகரிப்பது, கடுமையாக நடந்து கொள்ளாமை மற்றும் சைவமாக இருப்பது ஆகியவையாகும். இது கல்வியறிவு பெற்றவர்களுக்கும், அப்பாவி மக்களுக்கும் இடையே பெரும் பிரிவினையை உண்டாக்கியது. இது மஸ்தாக்கின் ஆதரவாளர்களை அரண்மனையை நோக்கி எதிர்க்க தூண்டியது. அரசியல்வாதிகளாலும், செல்வந்தர்களாலும் 528 ல் மஸ்தாக்கிஸம் விலக்கப்பட்டது. இந்த மஸ்தாக்கிஸமே மார்க்ஸுக்கு முந்தைய உலகின் முதல் சோஷியலிசமாகக் கருதப்படுகிறது.
531 (C.E.)  சஸானிய பேரரசின் முதலாம் கோஸ்ரோவ் (அனுஷிரவன்) என்பவர் ரோமர்களை வென்று பெர்ஷியர்களின் பெருமையை உயர்த்தினார். இவர் இந்திய, கிரேக்க மருத்துவ மற்றும் சயின்ஸ் புத்தகங்களை பெர்ஷிய மற்றும் பஹ்லாவி மொழிகளில் மொழி பெயர்த்தார். முதலாம் கோஸ்ரோவ் மற்றும் ஜொண்டி ஷபுரின் நூலகம் உலகின் மிகப் பெரிய நூலகமாகக் கருதப்படுகிறது. முதலாம் கோஸ்ரோவின் பிரதம மந்திரியாக இருந்த போஸோர்ட்மெஹ்ர் என்பவர் தான் உலகப் பிரசித்தி பெற்ற “பேக்கம்மான்” (BACKGAMMON)  என்ற விளையாட்டைக் கண்டுபிடித்தார்.
590 (C.E.)  மன்னர் கோஸ்ரோவ் பர்விஸுக்கு ஷிரின் என்ற மனைவி இருந்தார். இவர் பெர்ஷிய சஸ்ஸானிட் பேரரசின் ராணியுமாவார். இவர் பெர்ஷிய இராணுவத்தில் கமாண்டராகவும் இருந்து பைசாந்தியர்களுடன் பல போர்களை வென்றிருக்கிறார். ஷிரின் கிறிஸ்துவராக இருந்தார். ஒருமுறை தாக்க வந்த சிங்கம் ஒன்றிடமிருந்து ஷிரினை மன்னர் கோஸ்ரோவ் காப்பாற்ற இவர்களுக்குள் காதல் அரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள். கோஸ்ரோவ் மேற்கு ஈரானில் கெர்மன்ஷா பகுதியில் ராணி ஷிரின் பெயரில் அற்புதமான அரண்மனைகளைக் கட்டினார். தற்போது அவைகள் “கஸ்ர் இ ஷிரின்” என்று அழைக்கப்படுகிறது.
608 (C.E.) பெர்ஷியர்களுக்கும், பைசாந்தியர்களுக்கும் நிகழ்ந்த பல போர்களால் இருவருமே பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டும், பல உயிர் சேதங்களும் நிகழ்ந்தன. இருவரும் பகையாகவே இருந்தனர்.
629 (C.E.) கோஸ்ரோவ் பர்விஸின் மகள் புரண்டோக்ட் என்பவர் 26 வது சஸ்ஸானிய ராணி ஆவார். இவரது மூத்த சகோதரி அஸர்மிடோக்ட் ஆவார். இவர் சஸ்ஸானிய பேரரசில் நீதி நேர்மைகளை நிலையாட்டி, வரிகளைக் குறைத்தும், புதியதாக நாணயங்களையும் வெளியிட்டார். பைசாந்தியர்களுடனான போரில் பாதிக்கப்பட்டிருந்த பெர்ஷியாவை முன்னேற்றுவதில் பெரும் தோல்வியையே சந்தித்தார். அதனால், ராஜினாமா செய்தார்.
630 (C.E.) மன்னர் கோஸ்ரோவ் பர்விஸின் இளைய மகள் துரண்டோக்ட் இளவரசியாக இருந்தார். இவரைப்பற்றிய அதிகமான கதைகள் ஐரோப்பியர்களிடம் உண்டு. ஆயிரத்தோறு இரவுகள் என்ற கதைத் தொகுப்பிலும் இவரது கதை உண்டு. துரண் என்ற பெர்ஷிய பெயர் மத்திய ஆசியாவில் மிகவும் புகழ் வாய்ந்தது. உண்மையான துரானியன்கள் அவிஸ்டா காலம் என்னும் 1737 (B.C.E.)  க்கு முற்பட்ட துரிய ஈரானிய மக்களைக் குறிக்கும்.
634 (C.E.) மன்னர் கோஸ்ரோவ் மரணமடைந்த பிறகு, பெர்ஷியாவில் உள் நாட்டு கலவரங்களும், பைசாந்தியர்களுடனான போரும் நடந்தன. அதே நேரத்தில் தென்பகுதி பழங்குடி அரேபியர்களிடமிருந்தும் தாக்குதல்கள் வந்தன. பெர்ஷிய மன்னர் மூன்றாம் யஸ்டிகெர்ட் பைசாந்தியர்களுக்கு மட்டுமே பயந்தார். அதனால் இஸ்லாமியர்கள் படையெடுப்பை பொருட்படுத்தவில்லை. இஸ்லாமியர்களிடமிருந்து முதல் போர் சஸ்ஸானியர்கள் மீது பிரிட்ஜ் என்னும் இடத்தில் நடந்தது. இதில் சஸ்ஸானியர்கள் வெற்றி பெற்றனர். இருந்தாலும் ஒருங்கிணைந்த இஸ்லாமியர்கள் பெர்ஷியாவின் தென்பகுதி எல்லையைத் தாக்கினார்கள். மன்னர் மூன்றாம் யஸ்டிகெர்டிடம் ரோஸ்டம் ஃபர்ரோக்ஸட் என்பவர் பெர்ஷிய இராணுவத்தில் கவர்னராக இருந்தார். இவர் செஸிஃபோன் (CTESIPHON) என்ற இடத்தை ரோமர்களிடமிருந்து வென்று, அதை பெர்ஷியாவின் தலைநகரமாக்கினார். பலமுறை ரோமானியர்களை வென்றார். அர்மேனியாவையும், மெஸோபொடாமியாவையும் வென்று பெர்ஷியாவில் இணைத்தார். ‘நிஹாவண்ட் போரில்’ பெருமளவில் அரேபியர்கள் எதிர்த்தார்கள். பலமுறை அரபுகள் தோற்றிருந்தாலும், கடைசி சஸ்ஸானிய மன்னர் யஸ்டிகெர்டுக்கு இந்த முறை சற்று சந்தேகமாக இருந்தது. 700 ஆண்டுகளாக ரோமானியர்களுடன் நடந்த போரில் பெர்ஷியர்கள் பொருளாதாரம், இராணுவம் மற்றும் பல உயிர்களை இழந்திருந்தார்கள். மன்னரோ தெற்கிலிருந்து வந்த அரபுகளின் எதிர்ப்பை பெரிதும் பொருட்படுத்தாது இருந்தார். பெர்ஷியாவில் எப்போதுமே ஒரு துரோக கூட்டம் இருந்தது. அவர்கள் ரோமர்களிடமும், அரபுகளிடமும் விலை போனார்கள். முதலில் பெர்ஷிய எல்லைகள் இஸ்லாமியர்கள் வசம் விழுந்தன. பின் முழுவதுமாக இஸ்லாமியர்கள் பெர்ஷிய சஸ்ஸானிய பேரரசைக் கைப்பற்றினார்கள். மன்னர் மூன்றாம் யஸ்டிகெர்ட் ஓடிப்போய் தலைமறைவானார்.

கருத்துகள் இல்லை: