மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பெர்ஷிய வரலாறு 1



பெர்ஷிய வரலாறை முதலில் நான் எழுத வேண்டாம் என்று தான் இருந்தேன். முக்கிய காரணம், உமர் (ரலி) அவர்களையும், மற்ற நபித் தோழர்களையும் இழிவாகக் குறிப்பிட்டு வரலாறு படைத்துள்ளனர். 700 ஆண்டுகளாக ஆக்கிரமிக்க வந்த காட்டுமிராண்டி ரோமர்களைப்பற்றி அவ்வளவாக சொல்லப்படவில்லை. அருகாமையிலிருந்து வந்து ஆட்சியாலும், மொழியாலும், மதத்தாலும் நுழைந்த இஸ்லாமியர்களைப் பற்றி அருவருக்கத்தக்க காழ்ப்புணர்ச்சியுடன் வரலாறு படைத்திருக்கிறார்கள். ஆனால், உலகின் மூத்த வரலாறும், பலம் வாய்ந்த அரசாகவும் இருந்த இதை ஒரு காலத்தில் முஸ்லீம்கள் வெல்வார்கள் என்று மதீனாவின் தலைவராக இருந்த நபிகள் நாயகம் முன்னறிவிப்பு செய்ததால், அப்படிப்பட்டவர்களின் சரித்திரத்தை தெரிவிக்க வேண்டும் என்று எழுதுகிறேன். இதை ஆதியிலிருந்து நீண்ட வரலாறாக எழுதுகிறேன்.
                                 பெர்ஷியர்கள் மிகவும் புராதன மனித சமுதாயமாகவும், அந்தகாலத்திலேயே விவசாயம் செய்தவர்கள் என்றும் உயர்ந்த கோபுரங்களைக் கட்டினார்கள் போன்ற பல சரித்திர ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. சரித்திரத்தில் மிகவும் முற்போக்கு வளர்ச்சி பெற்ற நாகரீகமாகவும், எழுத்து, மொழி, சமூகம் மற்றும் கலைகளில் மிக உயர்ந்தவர்கள் எனவும் போற்றப்படுகின்றனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன் (B.C.E) 7000 வருடங்களுக்கு முன்பிருந்து, கிறிஸ்து பிறப்பிற்கு பின் (C.E.) வரை இவர்களின் நாகரீகம் நீண்டிருக்கிறது. இதை அந்தந்த கால கட்டத்திற்கேற்ப பெர்ஷியர்களின் வரலாற்றில் நடந்தவைகளை வரிசையாக காண்போம்.
                                  சரித்திரம் மனித சமுதாயத்திற்கு சிறந்த ஆசிரியராக இருக்கிறது. மேலும், கடந்த சரித்திரம் மனிதர்களை மேலும் முன்னேறத் தூண்டுகிறது. புராதன காலத்தில் பெர்ஷியா அறிவில் சக்திவாய்ந்த நாகரீகமாக இருந்தது. மருத்துவத்திலும், கணிதத்திலும், வாணிலை ஆராய்ச்சியிலும், இலக்கியத்திலும், தத்துவத்திலும், ஜோதிடத்திலும் பல வல்லுனர்களைக் கொண்டிருந்தது. பல ஆயிரமாண்டு ஆக்கிரமிப்புகளாலும், போர்களினாலும் பெர்ஷியா கடுமையாக நிலை கொண்டு நின்றது. நடுத்தர காலம் (MIDDLE AGE) என்று சொல்லப்படுகின்ற காலகட்டத்தில் பெர்ஷியா மிகச்சிறந்த அறிஞர்களை பல துறைகளில் இந்த உலகிற்கு தந்திருக்கிறது. அதில் உலகம் இன்றும் வியக்கும் மருத்துவத் துறையின் அவிசின்னா போற்றப்படுபவர். அவரின் ‘கேனன் ஆஃப் மெடிசின்’ (CANON OF MEDICINE) என்ற மருத்துவ துறை புத்தகம் உலகுக்கே வழிகாட்டி. அதனால் அவர் மருத்துவதுறையின் தந்தை என போற்றப்படுகிறார்.
7000 (B.C.E)  ஒரு சமுதாயம் நிலைபெற வேண்டுமென்றால், விவசாயம் சார்ந்திருப்பது மிகவும் என உணரப்பட்ட காலம். சமுதாயங்கள் நகர அமைப்புகளில் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு மாறினார்கள். பெர்ஷிய பீடபூமி உலகின் புராதன நாகரீகமாகவும், நாடாகவும் இருந்து அதில் முன்னேறியது. ஈரானில் இப்போதும் 1.2 மில்லியன் தடயங்களும், சுமார் 70,000 மேற்பட்ட பொருட்களும் பெர்ஷியர்களின் சரித்திரத்தை சொல்கின்றன. ஆனால், ஆதாரமில்லாவிட்டாலும் பெர்ஷியர்கள் 9000 (B.C.E) முற்பட்டவர்கள் என்று சில ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
6000 (B.C.E) இன்றைய தென்மேற்கு ஈரானின் கூஸெஸ்தான் பகுதியில் 8000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித நாகரீகமாக (அதற்கு முன் மனிதர்கள் தனி தனி குழுவாக பிரிந்து நீர்நிலைகளுக்கு ஏற்ற வண்ணம் இருந்தனர்.) “ஷூஷ் நாகரீகம்” (ஆங்கிலத்தில் சூசியானா) இருந்தது. இதுவே உலகின் முதல் மனித நாகரீகமாக சொல்லப்படுகிறது. நாகரீகம் என்பது ஒரு மன்னனின் கீழோ அல்லது ஒரு அதிகார வர்க்கத்தின் நகரமாகவோ, ஒரு தலைவனின் கட்டுப்பாட்டிலுள்ள மாநில அமைப்பிலோ முன்னேறிய மக்கள் கொண்ட ஒரு மனித சமுதாயம் ஆகும். சூசியன்கள் ஆரியர்கள் பெர்ஷியா விற்கு வருமுன் இருந்த ஈரானின் சொந்த இனமாகும். இவர்கள் செமிடிக் மற்றும் ஹெமிடிக் கலப்பில்லாதவர்கள். (அதாவது யூத இன கலப்போ அல்லது மொழியால் ஹீப்ரு மற்றும் அரபி இனமல்லாதவர்கள், மேலும் புராதன கருங்கடல் மற்றும் கஸ்பியன் கடலோர பகுதியைச் சேராதவர்கள்) வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பெர்ஷியாவில் குடியேறியவர்கள். சூசனியர்களின் மிக அருகில் மெசோபொடாமியா உள்ளது. அதனால் அவர்களின் நாகரீகமும் பெரும்பாலும் இவர்களை ஒத்திருந்தது. 1897 லிருந்து ஜன் மோர்கன் என்ற ஃப்ரென்ச் அகழ்வாராய்ச்சியாளர் இந்த நாகரீகத்தின் கண்டுபிடிப்பில் இறங்கினார். பின் டாக்டர். ஷீயில் என்பவர் சுசானியர்களைப் பற்றி பல உண்மைகளை வெளி உலகுக்கு கொண்டு வந்தார். அவர்கள் தொடங்கிய பணி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அகழ்வாராய்ச்சியாளர்கள் சுசானியர்கள் என்னும் ஷூஷ் நாகரீகத்தை இரு கால கட்டமாக பிரித்துள்ளனர். அவைகள் பூகோள அடிப்படையில் அவர்கள் கண்டெடுத்த உடல்கள் மற்றும் உலோகத்தை ஆதாரமாகக் கொண்டது. அதில் சுசானியர்களின் நாகரீகம் 7000 (B.C.E) என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
5000 (B.C.E) வைன் என்னும் மதுவகையின் வரலாறு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதற்கு மேலும் 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்று தற்போதைய கண்டுபிடிப்புகள் கூறுகிறது. உலகில் பல நாடுகள் வைனை சுவை கூட்டியதற்கும், மேம்படுத்தியதற்கும் அதிக ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இதன் ஆரம்பமூலம் வடஈரானின் நியோலிதிக் கிராமத்தில் (பெர்ஷியர்கள் இதை ‘ஹஜ்ஜி ஃபிருஸ் டிபி’ என்று அழைத்தனர்) வைனின் படிவங்களும், அதை சேமிக்கப் பயன்படுத்திய கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் காலம் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரானியர்கள் வைனை தென் ஐரோப்பாவிற்கும், எகிப்து, இந்தியா மற்றும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.
4200 (B.C.E) சுசானியர்கள் தென்மேற்கு பெர்ஷியாவில் கஷான் என்ற பகுதிக்கு அருகில் “சூசா” என்ற நகரம் அமைத்திருந்தார்கள். அது முன்னேறிய அரசியல் மற்றும் சமூக அமைப்பாக இருந்தது. இந்த சூசா நகரம் பழைய ஏற்பாட்டில் தூதுவர் தானியேல் வாழ்ந்த நகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாபிலோனின் ஆட்சியின் கீழ் ஒரு கவர்னரின் நிர்வாகத்தில் இருந்ததாகவும், பின்னாளில் சுதந்திரமாகி ஷா ஆஃப் சூசா என்பவரால் ஆளப்பட்டது. சிலர் சிலரின் கட்டுப்பாட்டிலும், சிலர் மன்னர்களாகவும், சிலர் சுதந்திரமாகவும் ஆண்டதாக கூறப்படுகிறது. அது சுதந்திரமான பிறகு, பல சமுதாயங்கள் உருவாகின. குறிப்பாக கிழக்கு ஸக்ரோஸ் மலை.
3200 (B.C.E) பல சமுதாயங்களாக இருந்த அவர்கள் ஒன்றாக இணைந்து ‘இலாமைட் நேஷன்’ என்ற பேரரசை உருவாக்கினார்கள். அன்றிலிருந்து பெர்ஷிய பீடபூமியில் உலகம் வியக்கும் நாகரீகம் தோன்றியது. அந்த பேரரசு 2000 வருடங்களுக்கும் மேலாக இருந்தது. சுசானியர்கள் இலாமைட் பேரரசின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்கள். அஸ்ஸைரியன்கள் என்பவர்களின் தாக்குதலிலிருந்து தற்காத்து கொள்ள 6 மீட்டர் அகலமுள்ள நீண்ட பெரும் சுவரைக் கட்டியிருந்தார்கள். வெளி உலக தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்ள ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவ அமைப்பையும் ஏற்படுத்திக் கொண்டனர். இந்த இலாம் (இலாமைட்) என்னும் மக்களும் செமிடிக் கலப்பில்லாதவர்களாகவே கருதப்பட்டனர். இலாமைட்டுகளின் மொழி பிரபலமாக இருந்தது. அது மற்ற செமிடிக் மொழியையோ அல்லது சுமேரியர்களின் மொழியையோ சார்ந்ததாக இருக்கவில்லை.
2500 (B.C.E) இந்தோ ஆர்யன் என்னும் மக்கள் சிறிய அளவில் பெர்ஷியாவில் குடியேறுகிறார்கள். இதனால் ஐரோப்பிய பழங்குடியினருக்கும் அவர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றுகின்றன. 2000 (B.C.E) யிலிருந்து 1000 (B.C.E) வரையிலான காலகட்டத்தில் ஆரியர்கள் பெரும் அளவில் பெர்ஷியாவில் குடியேறினார்கள். இந்த ஆரியர்கள் பெர்ஷியாவை “அய்ர்யானா” (ஆரியர்களின் பூமி) என்ற சரித்திரப்பெயரை வழங்கினர். அது நாளடைவில் ‘அர்யன்/ஈரான்’ என்று மாறியது. இந்த ஆரியர்களில் மேற்கு நோக்கி சென்றவர்கள் க்ரீக்கையும், கிழக்கு நோக்கி வந்தவர்கள் இந்தோ இரானியர்கள் என்றும் அறியப்பட்டார்கள். ஆரியர்கள் என்றால், மேலானவர்கள் அல்லது மரியாதை கொடுக்கப்பட வேண்டியவர்கள் என்று அர்த்தம். நாளடைவில் மொத்த பெர்ஷிய பீடபூமியையும் ஆக்கிரமித்த அவர்கள் தங்கள் அடையாளங்களை பதிக்க ஆரம்பித்தார்கள். சிறிய நகரங்களை நிர்வகிக்கவும், நகர மேயராகவும் ஆனார்கள். இதற்கிடையில் மெசோபொடாமியாவைச் சேர்ந்த அஸ்ஸைரியன் என்பவர்களிடமிருந்து  தாக்குதல்கள் வர ஆரம்பித்தன. இதனால் ஈரானிய பழங்குடியினர்கள் அனைவரும் சேர்ந்திருக்க வேண்டியதாகியது. பின்னாளில் ஈரானிய பழங்குடியினர் பெர்ஷியர்களாகவும், மெடிஸ்களாகவும், பார்த்தியன்களாகவும், செய்தியன்களாகவும் மேலும் பல இனத்தவர்களாகவும் ஆகினர்.

கருத்துகள் இல்லை: