மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பெர்ஷிய வரலாறு 3



545 (B.C.E.)  கஸ்ஸாண்டன் ஷாபானு என்னும் பெண்மனி சிறந்தவளாக திகழ்ந்தார். சைரஸ் தி கிரேட்டின் அன்பு மனைவி ராணி அமிடிஸ் காலமான பின் இவர் சைரஸ் தி கிரேட்டின் மனைவியானார். இவர் ஃபார்னஸ்பிஸ் என்பவரின் மகளாகவும், ஒடேன்ஸ் என்பவரின் சகோதரியாகவும் இருந்தார். கஸ்ஸாண்டேன் சைரஸ் தி கிரேட்டின் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதில் இரண்டாம் கேம்பிசிஸ் தந்தைக்குப் பிறகு எகிப்தை வென்றார். அடுத்தவர் ஸ்மெர்டிஸ் இவரும் குறுகிய காலம் பெர்ஷிய மன்னனாக இருந்தார். இவருக்கு அதுஸா என்னும் இளவரசி பிறந்தார். இளவரசி அதுஸா பின்னாளில் அக்காயிமெனிட் ராஜ குடும்பத்தில் முக்கிய பங்கு வகித்தாள். டேரியஸ் தி கிரேட்டை மணந்தாள். சரித்திர ஆய்வாளர் ஹிரோடோடசின் குறிப்புப்படி, சைரஸ் தன் மனைவி கஸ்ஸாண்டேனை மிகவும் விரும்பினார். மனைவி இறந்தபின் மொத்த தேசத்தையும் வருத்தம் தெரிவிக்க வேண்டினார். அந்த கவலையிலேயே அடுத்த சில ஆண்டுகள் எதிலும் தலையிடாமல் இருந்து இறந்து போனார். ராணி கஸ்ஸாண்டேனின் அடக்கவிடம் பெர்ஷியாவின் பசர்கடாயி என்ற இடத்தில் ஸெண்டான் இ சொலைமான் என்னும் பெயரில் உள்ளது.
540 (B.C.E.)  அக்டோபர் 29 உலக சைரஸ் மனித உரிமை நாளாக கொண்டாடப் பட்டது. அந்த நாளில் தான் சைரஸ் பதவியேற்றார். மர்தூக் என்னும் கோவிலில் அடிமை சுதந்திரத்தைப் பற்றி பேசினார். 539 ல் சைரஸ் தி கிரேட் பாபிலோனியர்களிடம் சிறைப்படுத்தப் பட்டிருந்த 50,000 யூதர்களை விடுவித்து, அவர்களை சொந்த இடமான ஜெருசலத்திற்கு அனுப்பி அவர்களின் தேவாலயத்தையும் புதுப்பித்து கொடுத்தார். இதற்கெல்லாம் பெர்ஷியர்களின் வரி மூலம் வந்த பணத்தை செலவிட்டார். யூதர்கள் சைரஸ் தி கிரேட்டை பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட யாஹ்வேயினால் அனுப்பப்பட்ட மெஸ்ஸியா இவர் தான் என்று புகழ்ந்தனர். சைரஸ் தி கிரேட்டின் மனித உரிமை பற்றிய புத்தகம் 2000 வருடங்கள் புகழ் வாய்ந்தது. இதை மக்னா கார்டா என்பவர் உறுதி செய்தார். மேலும், 1971 ல் ஐக்கிய நாட்டு சபை அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டது. உலகின் முக்கிய பொக்கிஷமாக கருதப்படும் அது பிரிட்டிஷ் மியூசியத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. மேலும், ஐக்கிய நாட்டு சபையின் தலைமையகம் நியூ யார்கிலும் பாதுகாக்கப் படுகிறது.
530 (B.C.E.)   மத்திய ஆசியாவில் மஸ்ஸாகெட்ஸ் என்பவர்களுடனான போரில் விஷம் தோய்ந்த அம்பினால் காயமுற்று சைரஸ் தி கிரேட் மரணமடைகிறார். சைரஸ் தி கிரேட் இன்றளவும் உலகின் சிறந்த தலைவரில் ஒருவராக கருதப்படுகிறார். தான் ஏற்றுக்கொண்ட ஸோரோஸ்ட்ரியனிசத்தைக் கூட தன் வரையில் வைத்துக்கொண்டார். அதை தன் மக்களிடம் கட்டாயப்படுத்தவில்லை. போர் சமயங்களில் விட்டு விட்டு போகாமல் கடைசி நிலை வீரருடன் நின்று சமமாகப் போரிட்டார். அவரின் விருப்பப்படி பசர்கடாயியில் பெர்ஷிய மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார். தன் அடக்கவிடத்தை வணங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
529 (B.C.E) சைரஸ் தி கிரேட்டின் மகன் இரண்டாம் கேம்பிசிஸ் ( கம்புஜியா) பெர்ஷியாவின் மன்னரானார். இவரும் தந்தையைப் போலவே ஆட்சி செய்தார். ஆனாலும், கிரேக்க சரித்திர ஆய்வாளர் ஹிரோடோடஸ் கேம்பிசிஸின் வாழ்க்கையில் நிறைய ரகசியங்கள் இருப்பதாக கூறுகிறார். இவர் மனநிலை சரியில்லாதவராகவும், அதனால் தான் எகிப்தின் புனித காளையைக் கொன்றார், கடைசி எகிப்து பாரோஹ் மன்னன் அமஸிசின் உடலை எரித்தார் மேலும் 522 ல் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகிறார்.
கேம்பிசிஸ் எகிப்தை வென்ற பிறகு, தன் படை வீரர்களால் சேதமாக்கப்பட்ட புனித நெய்த் கோவிலை புதுப்பித்தார். பெர்ஷியாவிற்கு திரும்பும் வழியில் இவரது 50,000 படை வீரர்கள் பாலைவன புழுதிக்காற்றால் விழுங்கப்பட்டனர். இது அடுத்த 1000 ஆண்டுகளுக்கு மர்மமாகவே இருந்தது. கேம்பிசிஸ் எகிப்தை வென்ற பிறகு, மறைந்து விடுகிறார். சிலர் அவர் சகோதரர் ஸ்மெர்டிஸ் புரட்சியின் மூலம் கேம்பிசிஸை மறைத்துவிட்டு அவர் மன்னராகி விட்டார் என்றனர். பின்னால் வந்த டேரியஸ் தி கிரேட் ஸ்மெர்டிஸை வெளியேற்றினார்.
522 (B.C.E.) டேரியஸ் தி கிரேட்டின் ஆட்சியில் பெர்ஷிய பேரரசு வானுயர எல்லையை தொட்டது. சைரஸின் எல்லா பாரம்பரிய வழக்கங்களையும் கடைபிடித்தார் .அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாத்தார். சாலைகள், துறைமுகங்கள், வங்கிகள் மற்றும் நைல் நதியிலிருந்து பூமிக்கு கீழேயே சென்று செங்கடலை தொடும் வண்ணம் கால்வாயும் அமைத்தார். இவர்தான் முதன்முதல் சுங்கவரி விதிப்பை கொண்டு வந்தார். பெர்சிபாலிசிக்கு அரண்மனையைக் கட்டினார். தி டரிக் என்னும் நாணயமுறையை முதலில் அறிமுகப்படுத்தினார். 2500 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்து பேரரசின் அனைத்து பகுதிகளையும் இணைத்தார். இவரின் மற்றொரு ராயல் ரோடு என்னும் திட்டம் மிகப் பிரபல்யமானது. உலகின் முதல் நீண்ட சாலை 1,500 மைல்கள் நீண்டது. மூன்று மாதங்களில் பயணிக்கும் தூரத்தை ஒன்பது நாட்களில் சுருக்கியது. இவரின் பனி, மழை, வெயில் காலங்களில் தடைபடாமல் செயல்பட்ட தபால்துறை மிகவும் சிறப்பானது. இதை பின்னாளில் அமெரிக்க தபால்துறை போனி எக்ஸ்பிரஸ் மெயில் டெலிவரி என்று நகலாக்கியது.
டேரியஸ் தி கிரேட்டின் மனைவியாக ராணி அதுசா ஷாபானு இருந்தார். இவர் சைரஸ் மற்ற்ம் கஸ்ஸாண்டேனின் மகளாவார். ஸெர்செக்ஸ் தி கிரேட்டின் (கெஷயார் ஷா) தாயாகவும் இருந்தார். இவர் காலத்தில் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். அரண்மனையின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டார். டேரியஸ் தி கிரேட்டுக்குப் பிறகு, மூத்த மகன் அர்டோபஸானிஸ் இருக்க இளைய மகன் ஸெர்செக்ஸ் மன்னராக இவரே காரணம் என்று கூறப்படுகிறது. கண்டுபிடிப்புகள் ராணி அதுசாவைப் பற்றி அதிகமான பழைய வரலாறுகளைத் தருகிறது. இவரின் ஆலோசனைகளை மன்னரும் கேட்டுக்கொள்வார்.
490 (B.C.E.) கோமட் என்னும் ஒரு இரவில் டேரியஸ் தி கிரேட் தனது பசர்கடாயியில் முன்னோர்களின் சமாதியில் மரியாதை செய்கிறார். உடன் ஏதென்ஸ்களின் தாக்குதல்களிலிருந்து பெர்ஷிய மக்களைக் காக்க சபதமேற்கிறார். தன் கௌரவம் காக்கப்படும் வரை தான் ஓய்வதில்லை என தன் வீரர்கள் முன் கொக்கரிக்கிறார். பெர்ஷியர்களின் வழக்கப்படி போருக்கு புறப்படும் முன் அடுத்த மன்னன் யார் என்று குறிப்பெழுத வேண்டும். டேரியஸ் தி கிரேட்டும் தனக்கு நகஷ் இ ரோஸ்தம் என்ற இடத்தில் நினைவிடம் அமைக்கவும், தனக்குப் பிறகு, ஸெர்செக்ஸ் மன்னராக வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். ஆனால், போரை முன்னெடுக்கும் முன் நோயால் காலமாகி விடுகிறார்.
488 (B.C.E.) இர்டபாமா சரித்திரத்தில் மிகவும் புகழ்வாய்ந்த வாணிகப் பெண்மனி. பெரும் நிலப்பரப்பை கொண்டவராகவும், அதிக வேலையாட்களைக் கொண்டவராகவும் இருந்தார். ஸெர்செக்ஸ் தி கிரேட் ஆட்சியின் போது இர்டபாமா சொந்தமாக வைன் மற்றும் தானிய தொழிற்கூடத்தை நடத்தினார். வாணிபத்தில் தனக்காக தனியான சிறப்புமிக்க அடையாளம் வைத்திருந்தார். ராஜ குடும்பத்து பெண்களுக்கு இணையாக சொத்து வைத்திருந்ததாக கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. சர்வதேச சரித்திர புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இவரின் சொத்து அக்கால அரை மில்லியன்களுக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இர்டபாமாவிற்கு பிறகு, ஐரோப்பா, ரோமில் பெண்கள் சொந்த தொழில் செய்ய தடைவிதித்தார்கள். அவர்களின் ஆலோசனைகளையும் கேட்டக்கூடாது என்று இருந்தது.
486 (B.C.E.) டேரியஸ் தி கிரேட்டுக்கும், சைரஸ் தி கிரேட்டின் மகள் அடோஸ்ஸாவுக்கும் பிறந்த பேரரசர் ஸெர்செக்ஸ் (ஸெயார்ஸா) ஆட்சியில் இருந்தார். எகிப்து, பாபிலோனியர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டதால், சகோதரர் அக்காயிமினசை எகிப்துக்கு கவர்னராக்கினார். அமெஸ்ட்ரிஸ் ராணியாக இருந்தார்.

கருத்துகள் இல்லை: