மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 30 அக்டோபர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 3



பாகம் : 3
வளர்ப்பு முறை
சகோதரர்கள் நஜ்முத்தீன் அய்யூபும், ஷிர்குஹும் பாக்தாதை விட்டு மோஸுல் நகரின் ஆட்சியாளர் இமாத்ததீன் ஸங்கி என்பவரிடம் அடைக்கலம் அடைந்தனர். இமாத்ததீன் சங்கி அவர்கள் சகோதரர்களை வரவேற்று பரிசுகளை வழங்கி அரவணைத்துக் கொண்டார். இதே இமாத்ததீன் சங்கி ஒரு முறை செல்ஜுக்கின் மீது படையெடுத்து தோல்வியடைந்து போர் கைதியாக இந்த சகோதரர்களிடம் பிடி பட்ட போது இமாத்ததீன் சங்கி மீது கருணை கொண்டு அவரை மோஸூலுக்கு திரும்பி தப்பிச் செல்ல உதவினர். அந்த உதவிக்கு இன்று இமாத்ததீன் சங்கி பரிகாரம் தேடிக் கொண்டார். சகோதரர்களுக்கு நிலம், வீடு வழங்கி வாழ்க்கை வசதி செய்து கௌரவித்தார். மேலும் இரு சகோதரர்களையும் இராணுவத்தில் கமாண்டர்களாக நியமித்தார்.
534 A.H. 3 இமாத்ததீன் சங்கி ‘பா அல்பக்’ என்ற பகுதியை கைப்பற்றினார். அதற்கு நஜ்முத்தீன் அய்யூபை கவர்னராக நியமித்தார். இது இமாத்ததீன் சங்கி நஜ்முத்தீன் அய்யூப் மீது கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்தியது, ஸலாவுத்தீனின் இளமைப் பருவத்தின் மிகச் சிறந்த நாட்கள் ‘பா அல்பக்’ ல் கழிந்தது. தந்தையாரின் பணி காரணமாக தனித்து விடப்பட்ட ஸலாவுத்தீன் அங்கு அவர் குதிரையேற்றம், ஜிஹாத், போர்திறமை, அரசியல், நிர்வாகம் போன்றவற்றை திறமையாக கற்றுக் கொண்டார்.
1154 C.E. இமாத்ததீன் சங்கியின் மகன் நூருத்தீன் டமாஸ்கசை கைப்பற்றினார். ஸலாவுத்தீனுக்கு டமாஸ்கஸ் நகரம் செல்லும் வாய்ப்பு வந்தது. அவரின் வாலிபத்தின் மிகச் சிறந்த நாட்கள் அங்கு கழிந்தன. ஸலாவுத்தீனுக்கு தனது வலிமையையும், தைரியத்தையும் வெளிப்படுத்த டமாஸ்கசில் இருந்த நாட்கள் பயன்பட்டன.
தனது  இறைபக்தியாலும்,அமைதியான குணத்தினாலும், சாதுர்யத்தினாலும் நூருத்தீனிடமிருந்து மரியாதையையும், உயர்ந்த தகுதியையும் பெற்றார். மேலும் இஸ்லாமுக்காக முஸ்லீம் களிடத்தில் நம்பிக்கைத் தீயை வளர்த்தார். நூருத்தீன் ஸலாவுத்தீனை நூருத்தீன் டமாஸ்கஸ் காவல்துறையில் உயர் பதவியில் அமர்த்தினார். அவர் டமாஸ்கஸ் நகரில் திருட்டு மற்றும் பிற குற்றவாளிகளை களையெடுத்து நகரில் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் பலப்படுத்தி மக்கள் இவரின் நிர்வாகத்தில் அமைதியாக வாழ வழிப்படுத்தினார்.
இவரின் வாழ்க்கையில் முக்கியமான கால கட்டம் எகிப்தில் இவர் வெளிப்படுத்திய இராணுவ அநுபவமும், வீரமும் தான். இவரின் பெரும் முன்னேற்றம் இருபதில் இருந்து நாற்பது வயதுக்குள் ஏற்பட்டது. இவரின் இஸ்லாமிய நம்பிக்கை, போர்த்திறமை, நிர்வாகத்திறமை, தீர்க்கமான முடிவுகள், அமைதியான குணம் போன்றவை அரசர்களையும், இளவரசர்களையும் கவர்ந்து கொண்டது. அவர்கள் ஸலாவுத்தீனுடன் நெருங்கி இருப்பதை விரும்பினார்கள். அதுவே பின்னாளில் சரித்திரத்தை மாற்றி எழுதியது.

கருத்துகள் இல்லை: