மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 7 நவம்பர், 2013

ஸலாவுத்தீன் வரலாறு 25



பாகம் : 25
எகிப்து நகரம் அவருக்கு முக்கியமாக கடற்படை தளமாக இருந்தது. அலெக்ஸாண்டிரியா, டமெய்டா முக்கிய துறைமுக மாக இருந்தது. நைல் நதியின் துறைமுகமாக அல் ஃபுஸ்தத், குஸ் போன்றவை போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு எந்நேரமும் தாக்குதலுக்கு தயாராய் இருந்தன.
கல்வித்துறையிலும் ஆர்வமாய் இருந்தார். சிறு பிள்ளைகளுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு குர்ஆன் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். ஆரம்ப கல்வி முடித்த இளைஞர்களை அடுத்துள்ள நாடுகளில் உயர் கல்வி கற்க உதவி செய்தார். இவர் காலத்தில் கெய்ரோவில் அம்ர் இப்னு அல் அஸ், அல் அஸர், அல் அக்மார், அல் ஹகிம் பியம்ரில்லாஹ், அல் ஹுஸ்ஸைன் மசூதிகளும், அலெக்ஸாண்டிரியாவில் அல் அத்தரின் மசூதியும் கட்டப்பட்டன. டமாஸ்கஸ் நகரம் உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் மத போதனையாளர்களுக்கும், பயில்பவருக்கும் பாலமாக இருந்தது. எகிப்திலும், திரிபோலியிலும் அமைந்த தார் அல் ஹிக்மா எண்ணற்ற மாணவர்களைக் கொண்டதாக இருந்தது. ஸலாவுத் தீன் ஹனஃபி (இமாம் பிரிவு) மத மத்ஹப்பின் வழியில் மத கல்வி போதனைகளை அஸ் ஸியுஃபியாஹ் பள்ளியில் பயிற்றுவிக்க வேண்டினார். அதற்காக 32 நிறுவனங்களின் மூலமாக வருமானம் வரச் செய்தார். அதே போல் தான் பின்பற்றிய ஷாஃபி (இமாம் பிரிவு) மத மத்ஹப் பள்ளிகளையும் நிர்மாணித்தார், அதற்கும் வருமானத்திற்கு வழி செய்தார். அவரின் ஆட்சியில் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. வருமானத்தை ஜிஹாத், கட்டிடங்கள் நிர்மாணம், கோட்டைகள், அரண்மனைகள், அணைக்கட்டுகள், கல்வி என்று பல துறை களில் முன்னேற்றத்திற்கு செலவிட்டார். விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கினார். வணிகத்தில் கவனம் செலுத்தி எகிப்தை கிழக்கும், மேற்கும் இணைக்கச் செய்தார். வெனிஸ், பிசா போன்ற பல ஐரோப்பிய நகரங்களை வியாபார ரீதியாக எகிப்தின் முக்கிய நகரங்களுடன் தொடர்பு கொள்ள செய்தார். வெனிஸ் வியாபாரிகள் அலெக்ஸாண்டிரியாவில் அமைத்த அல் ஐக் மார்கட் என்ற வணிக வளாகம் மிகவும் புகழ் பெற்றது. திரிபோலியில் காகித தொழிற்சாலை அமைத்தது ஸலாவுத் தீனின் சாதனை. பின்னர் சிலுவைப் போராளிகள் இதை ஐரோப்பாவுக்கு மாற்றிக்கொண்டனர். முதல் காகித தொழிற் சாலை பெல்ஜியத்தில் 1189 C.E. ல் நிறுவப்பட்டது. அதுவரை இங்கிலாந்தில் 16 ம் நூற்றாண்டு வரை காகிதத் தொழிற்சாலை வரவில்லை.
அல் இமாத் அல் அஸ்ஃபஹானி என்பவர், ஸுல்தான் எப்போதுமே கவுரவமான உடையையே அணிவார். அதுவும் பருத்தி, கம்பளியிலான உடையாகவே இருக்கும். அவர் யாருடனாவது இருக்கும் போது, தான் ஒரு சுல்தானாகவே நினைக்க மாட்டார் என்கிறார். விளையாட்டில் ஆர்வமுள்ள வராக இருந்தார். (D)ஸுஹ்ர் என்னும் தொழுகையிலிருந்து அஸ்ர் என்னும் தொழுகை வரை வீரர்களை போலோ என்னும் விளையாட்டை ஆடவிட்டு கண்டு களிப்பார். இஸ்லாத்திற்கு புறம்பான விஷயங்களை தடை செய்தார். முஹர்ரம் 10 அஷுரா நாளில் மக்கள் வேலைகளை புறக்கணித்து, வியாபார நிறுவனங்களை மூடிவிட்டு அழுது புரண்டு துக்க நாளாக கொண்டாடுவதை தடை செய்தார். மக்காவின் இளவரசர் மக்காவிற்கு புனித பயணம் வருபவர்கள் ஜித்தா நகரில் நுழையும் முன், வரி செலுத்த வேண்டும் என்று சட்டம் வைத்தி ருந்தார். ஸலாவுத்தீன் அந்த வரியை நீக்கி அதற்கு ஈடாக இளவரசருக்கு எட்டாயிரம் அர்திப் கள் ( ஒரு அர்திப்= 84 கிலோ) கோதுமையை செலுத்தினார். அது மக்க நகர் மக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாய் இருந்தது.        
ஸலாவுத்தீனுக்கு சமாதானமாக போகும் பழக்கமில்லை. இதற்கு சரித்திர ஆதாரம் இருக்கிறது. சில சமயம் அவரின் வீரர்களின் சலிப்பினாலும், அவரின் உத்தரவை செயல் படுத்தும் தயக்கத்தி னாலும் சமாதான ஒப்பந்தங்களுக்கு ஒப்புக் கொண்டார். ஸலாவுத்தீன் அல்லாஹ்வின் அழைப்பிற்கேற்ப மக்களை ஜிஹாத்தின் பால் அழைத்து பாலஸ்தீனையும், சிரியாவையும் சுத்தப்படுத்த எண்ணினார். அந் நகரங்களை எதிரிகள் ஆளும் போது லஞ்சத்தினாலும், ஒழுக்கமற்ற வகையிலும் கெடுத்து வைத்திருந்தனர். மீண்டும் எதிரிகள் ஒன்று கூடி வந்து முஸ்லீம் களை தாக்குவார்களோ என்று அஞ்சினார்.
அல் கதி இப்னு ஷத்தாத் எழுதிய ‘அந் நவாதிர் அஸ் ஸுல்தா னியா’ என்ற புத்தகத்தில் விலாவாரியாக சொல்லி இருக்கிறார். தான் ஒப்பந்தங்களுக்கு என்றுமே விரும்பிய தில்லை என்றும், என்றைக்கும் அவர்கள் திரும்பி வந்து போர் தொடுத்து அவர் களின் நகரங்களை கைப்பற்ற நினைப்பார்கள். ஐரோப்பியர்கள் ஆளுக்கொரு நகரத்தை பிரித்து ஆள்வார்கள். என்று ஸலாவுத்தீன் கூறியதாக கூறுகிறார்.
எப்படியாயினும் பல இழப்புகளை ஏற்படுத்திய பிறகு இரு தரப்பும் ரம்லாஹ் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டனர். இது இரு தரப்புக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தவில்லை. ஒப்பந்தமான தினத்தை நினைவு நாளாக கொண்டாடினர். இருவரும் அவர்கள் கலாச்சார முன்னேற்றத்திற்கும், கட்டிடங்களை சீரமைக்கவும் நெடுநாட்கள் எடுத்துக் கொண்டனர். யார் வேண்டுமானாலும் இங்கிருந்து அங்கேயும், அங்கிருந்து இங்கேயும் வரலாம். ஒப்பந்தத்திற்கு பிறகு அமைதியும், வியாபாரமும், பொருளாதார சீர்திருத்தமும் தொடர்ந்தது. முஸ்லீம்கள் யஃப்ஃபா சென்று உணவுப் பொருள் களுக்கும், வியாபாரத்திற்கும் ஆன வழியை தேடினார்கள். பாலஸ்தீனில் நிலைமை சுமூகமாகி மக்கள் நிலையான தன்மை யும், பாதுகாப்பும் பெற்றவர்களாக மகிழ்ச்சி அடைந்தனர்.
சுல்தான் ஸலாவுத்தீன் ஜெருசலத்தில் கிறிஸ்தவர்கள் வந்து போவதற்கு வசதியாக எல்லை கதவுகளை திறந்து வைத்தார். பெருவாரியான கிறிஸ்தவர்களின் போக்குவரத்தால், ஆங்கில மன்னன் ஸலாவுத்தீன் அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு செய்வாரோ என்று பயந்தார். அதனால், ஸலாவுத்தீனை யாத்திரி கர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளச் செய்தார். ஆனால் ஸலாவுத்தீன் அவரின் கோரிக்கையை மறுத்து வெகு தொலைவிலிருந்து வரும் யாத்திரிகர்களை ஒப்பந்தப்படி தடுக்க தன்னால் முடியாது என்று மறுத்து விட்டார். மேலும், கிறிஸ்தவ யாத்திரிகர்களுக்கு உணவு அளித்து அவர்களுடன் நல்லுறவுடன் பேசினார். இது மேற்கத்திய, கிழக்கத்திய ஐரோப்பிய மன்னர் களுக்கு சகிப்புத்தன்மைக்கும், மன்னிப்பை நாடுவோரும், நல்லுறவை விரும்புவோரும் தரும் பாடம் என்றும், இதுவே இஸ்லாமியர்களின் சிறந்த பண்பு என்பதையும் புரிய வைக்கும் என்று நினைத்தார்.  இது ஆங்கில மன்னன் இங்கிலாந்து திரும்பு வதற்கு முன்பு நடந்தது.
ஸலாவுத்தீன் ரம்லாஹ் ஒப்பந்தத்திற்கு பிறகு, ஜெருசலம் வந்து அதன் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்ந்தார். அங்கு மறுசீரமைப்பாக கல்வி நிலையங்களையும், மருத்துவமனை களையும், சிதறிப் போன நிர்வாகத்தையும் சரி செய்தார். அவர் ஹஜ் புனித பயணம் போக விரும்பினார். ஆனால், இளவரசர்கள் வேண்டாம் என்றும் எதிர்களால் அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என ஆலோசனை கூறினர். அதை அவர் ஏற்றுக் கொண்டார். கடற்கரை நகரங்களுக்கு பயணித்து எதிரிகளால் சேதமடைந்த அரண்மனைகளையும், கோட்டை களையும் பார்வையிட்டார். ஜெருசலத்திலிருந்து நப்லுஸ், பைசன், டைபிரிஸ், பெய்ரூட், டமாஸ்கஸ் வரை சென்றார். ஒவ்வொரு இடத்திலும் அந்த மாவீரரை மக்கள் தங்கள் வியாபாரம். வேலைகளை மறந்து வீதியெங்கும் திரளாக வரவேற்றனர். அது பயத்திற்காக அல்ல, தங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி, நீதியை பரவச் செய்து, நல்ல வாழ்க்கை முறையை எற்படுத்தி கொடுத்த உன்னதமான தலைவனுக்காக. டமாஸ்கஸில் மறுசீரமைப்பை தொடங்கி, தேவையானவர் களுக்கு வசதி செய்து கொடுத்தும், படைவீரர்களுக்கு சொந்த ஊர் செல்ல விடுப்பு கொடுத்தும், மக்களின் குறைகளை அறிந்து நிவர்த்தியும் செய்தார். என்றைக்குமே டமாஸ்கஸ் அவருக்கு பிடித்த நகரமாக இருந்தது. அங்குதான் தன் சகோதரர் அல் அதிலுடனும், அவரின் குழந்தைகளுடனும் வேட்டையாட பழகிக் கொண்டார். நீண்ட நாட்களாக போரினால் நீடித்த இரவுகளையும், களைப்பையும், ஆயாசத்தையும் போக்கி புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டார். இப்னு ஷத்தாத்,” ஸலாவுத்தீனின் டமாஸ்கஸின் மகிழ்ச்சி அவருக்கு எகிப்து திரும்பும் எண்ணத்தையே மறக் கடிக்க செய்து விட்டது” என்று சொல்கிறார். தன்னை தன்னுடன் தங்குவதற்கு ஸலாவுத்தீன் டமாஸ்கஸ் அழைத்தார் என்றும் தன்னைக் கண்டவுடன் தழுவி கண்ணீர் விட்டார் என்றும் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை: